திருச்செந்துார் கந்தசஷ்டி பெருவிழா; 181 கேமராக்கள்; 2,000 போலீஸ் தயார்
திருச்செந்துார் கந்தசஷ்டி பெருவிழா; 181 கேமராக்கள்; 2,000 போலீஸ் தயார்
ADDED : அக் 31, 2024 04:59 AM

சென்னை,: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி பெருவிழாவுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
இந்தாண்டு கந்தசஷ்டி பெருவிழா, நாளை மறுநாள் 2ம் தேதி துவங்கி, 7ம் தேதி சூரசம்ஹாரமும், 8ம் தேதி திருக்கல்யாணமும் நடக்க உள்ளது.
கந்தசஷ்டி விரதத்தின் முதல் ஐந்து நாட்களுக்கு, தினமும் ஒரு லட்சம் பேரும், சூரசம்ஹாரத்தன்று ஆறு லட்சம் பேரும், திருக்கல்யாணத்திற்கு இரண்டு லட்சம் பேரும் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களின் தேவைக்கேற்ப, வாகனங்கள் நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி, 181 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும், கோபுரங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
விழா நாட்களில், 2,000க்கும் மேற்பட்ட போலீசார், சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அவசர சிகிச்சை, மருத்துவ உதவிக்கு முக்கிய இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து, ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன.
சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு, 18 இடங்களில், 1.30 லட்சம் சதுரடியில் நிழல் கொட்டகைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படுகின்றன.
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் விரைவாக தரிசனம் செய்ய, சிறப்பு வழி அமைக்கப்பட உள்ளது. கந்தசஷ்டி திருவிழாவின்போது, நாள் முழுதும் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. பொது தரிசன வரிசையில் இந்தாண்டு, அடிப்படை வசதிகளுடன், 'கியூ காம்பிளக்ஸ்' அமைக்கப்பட்டுள்ளது. கடலில் நீராடும் பக்தர்களின் பாதுகாப்புக்கு, பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
கந்தசஷ்டி நிகழ்வுகளை பார்க்க, எல்.இ.டி., திரைகள் முக்கிய இடங்களில் அமைக்கப்படுகின்றன. விழா நாட்களில், கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை பராமரிக்க, 400 துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
திருச்செந்துாருக்கு கூடுதல் பஸ்களை இயக்கவும், தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.