ரூ.45 கோடி கையாடலில் சிக்கிய திருமலா மேலாளர்; கைகள் கட்டப்பட்ட நிலையில் உடல் மீட்பு
ரூ.45 கோடி கையாடலில் சிக்கிய திருமலா மேலாளர்; கைகள் கட்டப்பட்ட நிலையில் உடல் மீட்பு
ADDED : ஜூலை 11, 2025 07:39 AM

சென்னை: 'திருமலா' பால் நிறுவனத்தில், 45 கோடி ரூபாய் கையாடல் குற்றச்சாட்டில் சிக்கிய அந்நிறுவனத்தின் கருவூல மேலாளர், குடிசை வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவரின் கைகள் கட்டப்பட்டு இருந்ததால், அவர் அடித்து கொலை செய்யப்பட்டு துாக்கில் தொங்கவிடப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நவீன் பொலினேனி, 37; திருமணமாகாதவர். சென்னை மாதவரத்தில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். மூன்று ஆண்டுகளாக, மாதவரம் பொன்னியம்மன்மேடு, திருமலை நகர் விரிவு பகுதியில் உள்ள 'திருமலா' பால் நிறுவனத்தில், கருவூல மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
அப்போது, நிறுவனத்தில் இருந்து, 44.5 கோடி ரூபாயை கையாடல் செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. நிறுவனத்தாரின் விசாரணையில், பண மோசடி செய்ததை ஒப்புக்கொண்டார். கையாடல் செய்த பணத்தை, தன் தாய் விஜயலட்சுமி, சகோதரி லட்சுமி மற்றும் நண்பர்கள் வங்கி கணக்கிற்கு செலுத்தி, அதை மீண்டும் தன் வங்கி கணக்கிற்கு திரும்ப பெற்றதாக கூறப்படுகிறது.
கையாடல் செய்த பணத்தை தவணை முறையில் திரும்பத் தருவதாக கூறிய அவர், முதல் தவணையாக ஐந்து கோடி ரூபாயை, ஜூன், 26ல், வங்கி கணக்கு மூலமாக, திருமலா பால் நிறுவனத்திற்கு செலுத்தி உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, புழல் பிரிட்டானியா நகரில், நவீன் பொலினேனிக்கு சொந்தமான குடிசை வீட்டில், குறுக்கே போடப்பட்டுள்ள கட்டையில், பச்சை நிற நயிலான் கயிற்றால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில், இறந்து கிடந்த நவீன் பொலினேனியின் கைகள் கட்டப்பட்டு இருந்தன. துாக்கு போடும் உயரத்திற்கு ஏற டேபிள் எதுவும் இல்லை. இதனால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, சந்தேகம் எழுகிறது. இதனால்,புழல் போலீசார், சந்தேக மரணம் என்றே வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், நவீன் பொலினேனி கையாடல் செய்த பணம் தொடர்பாக, திருமலா பால் நிறுவனம் சார்பில், கொளத்துார் துணை கமிஷனர் பாண்டியராஜனிடம் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதியாமல் விசாரணை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பணம் கையாடல் செய்த விவகாரத்தில் மிரட்டப்பட்டதால், நவீன் பொலினேனி தற்கொலை செய்திருக்கலாம் அல்லது அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என, போலீசார் கூறுகின்றனர்.
இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: நேற்று முன்தினம் காலை, நவீன் பொலினேனியை, திருமலா பால் நிறுவனத்தைச் சேர்ந்த நரேஷ், குகுந்த் ஆகியோர் சந்தித்துள்ளனர். 'கையாடல் பணத்தை திரும்ப செலுத்தினாலும், உன்னை சும்மா விடமாட்டோம்; சிறைக்கு அனுப்புவோம்' என, மிரட்டி உள்ளனர். அது தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடக்கிறது.
நவீன் பொலினேனி இறந்து கிடந்த இடத்திற்கு தன் 'மகேந்திரா தார்' காரில் சென்றுள்ளார். கையாடல் செய்த பணத்தில், சென்னையில் நிலம் மற்றும் சொகுசு கார்களையும் வாங்கி இருப்பது தெரியவருகிறது. கையாடல் செய்த தொகை அதிகம் என்பதால், பால் நிறுவனத்தின் சட்ட மேலாளர் முகமது தமிமுல் அன்சாரி, கொளத்துார் துணை கமிஷனர் பாண்டியராஜிடம் தந்த புகார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. முழுமையான விசாரணைக்கு பின்னரே தற்கொலையா, கொலையா என, தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த மோசடியை நவீன் பொலினேனி மட்டுமே செய்திருக்க வாய்ப்பில்லை. அந்நிறுவனத்தில் உள்ள மற்ற சில அதிகாரிகளும் துணை போயிருக்கலாம். இதனால், முதல்வர் ஸ்டாலின், சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். - பொன்னுசாமி, தலைவர், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்
- நமது நிருபர் -

