ஒடிசா பெண்ணுக்கு ஆட்டோவில் பிரசவம்; திருப்பூர் பெண் போலீசுக்கு பாராட்டு!
ஒடிசா பெண்ணுக்கு ஆட்டோவில் பிரசவம்; திருப்பூர் பெண் போலீசுக்கு பாராட்டு!
UPDATED : ஆக 16, 2025 12:22 PM
ADDED : ஆக 16, 2025 12:17 PM

திருப்பூர்: திருப்பூரில் பிரசவ வலியில் துடித்த ஒடிசா பெண்ணுக்கு, பெண் போலீஸ் கோகிலா பிரசவம் பார்த்தார். தாயும், சேயும் நலமாக உள்ளனர். தக்க நேரத்தில் உதவிய பெண் போலீஸ் கோகிலாவை போலீசார் அனைவரும் பாராட்டினர்.
திருப்பூர் மாநகரம், 15 வேலம்பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங் ரோடு அருகே நேற்று இரவு (12:00 மணி) போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். எஸ்.ஐ., பிரபுதேவா, வேலம்பாளையம் ஐ.எஸ்., போலீஸ் மணிகண்டன், ஆயுதப்படை போலீஸ் கோகிலா, வெற்றி செல்வன் ஆகியோர் பணியில் இருந்தனர்.திடீரென போலீசாரை கடந்து சென்ற ஆட்டோவில் பெண் கதறி அழுவது தெரிந்தது. உடனே போலீசாரை பார்த்ததும், டிரைவர் ஆட்டோவை நிறுத்தினார்.
வடமாநில பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறினார். உடனே, பணியில் இருந்த பெண் போலீஸ் கோகிலா ஆட்டோ உள்ளே சென்று பார்த்தார். பெண்ணுக்கு பிரசவ வலியில் பனிகுடம் உடைந்து, குழந்தை பாதி வெளியில் வந்து துடித்து வருவது தெரிந்தது. பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்து விட்டு, ஆட்டோவில் ஏறி அமர்ந்தார்.
எஸ்.ஐ., மற்றும் ஐ.எஸ்., போலீசார் மற்றொரு வாகனத்தில் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு முன்னேற்பாடுகளை செய்ய விரைந்தனர். செல்லும் வழியிலேயே கர்ப்பிணிக்கு, பெண் போலீஸ் கோகிலா பிரசவம் பார்த்தார். அழகான பெண் குழந்தை பிறந்தது. பின், மருத்துவமனைக்கு சென்றதும், தாயும், சேயும் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் டாக்டர்கள் கண்காணிப்பில் நலமாக உள்ளனர். பிரசவம் பார்த்த பெண் போலீஸ் மற்றும் பணியில் துரிதமாக செயல்பட்ட மற்ற போலீசாரையும் கமிஷனர் உள்ளிட்டோர் அனைவரும் பாராட்டினர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது: ஒடிசாவை சேர்ந்த சீத்தராம் - பாரதி தம்பதி. அவிநாசி கைகாட்டிபுதுாரில் தங்கி பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். கர்ப்பிணியான பாரதிக்கு, 24, பிரசவ வலி ஏற்பட்டு ஆட்டோவில் அழைத்து செல்லும் போது, பனிகுடம் உடைந்து, குழந்தை பாதி வெளியே வந்திருந்தது தெரிந்தது.
பணியில் இருந்த பெண் போலீஸ் கோகிலா, அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்து, பத்திரமாக குழந்தையை வெளியே எடுத்தார். மருத்துவமனையில், இருவரும் அனுமதிக்கப்பட்டனர். பிரசவம் பார்த்த பெண் போலீஸ் நர்சிங் முடித்து இருப்பதால், பாதுகாப்பாக குழந்தையை வெளியே எடுத்தார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இந்த பெண் போலீஸ் செயல் குறித்தும், அவருக்கும் வாழ்த்து தெரிவித்தும் கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!