திருவண்ணாமலையில் பலத்த மழை! வீடுகள் மீது உருண்ட பாறை! 7 பேர் நிலை என்ன
திருவண்ணாமலையில் பலத்த மழை! வீடுகள் மீது உருண்ட பாறை! 7 பேர் நிலை என்ன
ADDED : டிச 01, 2024 10:14 PM

திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் பலத்த மழையின் போது பாறை உருண்டு விழுந்ததில் 2 வீடுகள் மண்ணில் புதைந்தன. அதில் இருந்த 7 பேரின் கதி என்ன என்பது தெரியாத நிலை நிலவுகிறது.
தமிழகம் முழுவதும் இன்னமும் பெஞ்சல் புயலின் தாக்கம் ஓயவில்லை. கடலோர மட்டும் வட மாவட்டங்களை ஒரு சுற்று, சுற்றிய பெஞ்சல் இப்போது வட மாவட்டங்களை பதம் பார்த்து வருகிறது.
திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. இந்நிலையில் கோயில் நகரமான திருவண்ணாமலையில் பலத்த மழை காரணமாக பாறை உருண்டு குடியிருப்புகளில் விழுந்துள்ளது.
குறிப்பாக மலையடிவார பகுதியான வ.உ.சி., நகர், கருமாரியம்மன் நகரில் மண் சரிந்து பாறை உருண்டுள்ளது. இதில் அடிவார பகுதியில் உள்ள 2 வீடுகள் கடும் சேதம் அடைந்தன. அந்த வீடுகளில் இருந்த 7 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றுவிட்டனர். கலெக்டர் பாஸ்கர பாண்டியனும் அங்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்துள்ளார். தற்போது அங்கு கும்மிருட்டான நேரம் என்பதோடு, மழையும் பெய்து வருவதால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.