ADDED : ஜூலை 07, 2026 04:04 AM

சென்னை: வளைகுடா பிரச்னையால் ஒரு டன், 75,000 ரூபாயாக உயர்ந்த கட்டுமான பணிக்கான, டி.எம்.டி., கம்பி விலை, தற்போது ஒரு டன், 55,000 ரூபாயாக குறைந்துள்ளது.
நாடு முழுதும் கட்டுமானப் பணிக்கு, டி.எம்.டி., வகை கம்பிகள், பிரதானமாக பயன்படுத்தப் படுகின்றன. இந்நிலையில், வளைகுடா பிரச்னையின் போது, வெகுவாக உயர்ந்த கம்பிகளின் விலை தற்போது குறைந்துள்ளது.
இது குறித்து, கட்டுமானத் துறையினர் கூறியதாவது: கட்டுமான பணிகளுக் கு, தற்போதைய சூழலில், 8 மி.மீ., முதல் 16 மி.மீ., வரையிலான டி.எம்.டி., கம்பிகள் பயன்படுத்தப் படுகின்றன. இதில், வளைகுடா பிரச்னை தொடங்கும் முன், ஒரு டன் டி.எம்.டி., கம்பி 62,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
வளைகுடா பிரச்னை தொடங்கிய பின், 75,000 ரூபாய் வரை விலை அதிகரித்தது. இதனால் கட்டுமானப் பணிகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போது, வளைகுடா நாடுகளில் இருந்து, கப்பல்கள் தடையின்றி வரத் தொடங்கி உள்ளதால், கம்பிகள் விலை குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு டன் டி.எம்.டி., கம்பி, 45,000 முதல், 55,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
பல்வேறு மாநிலங்களில், தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாலும், உற்பத்தி நிலையில் பிரச்னைகள் குறைந்ததாலும், விலை குறைக்கப்பட்டுள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால், வீடு கட்டுவோருக்கு ஏற்பட்ட கூடுதல் செலவு குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
