அமைச்சர் நேரு மீதான ஊழல் குற்றச்சாட்டு: மறு ஆய்வு மனு தாக்கல் செய்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை
அமைச்சர் நேரு மீதான ஊழல் குற்றச்சாட்டு: மறு ஆய்வு மனு தாக்கல் செய்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை
UPDATED : மார் 03, 2026 11:25 PM
ADDED : மார் 03, 2026 10:21 PM

சென்னை: அமைச்சர் நேரு மீது ஊழல் வழக்குப் பதிய வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத் துறை மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், கடந்த 2024- - 25ம் ஆண்டுகளில் உதவி, இளநிலை பொறியாளர் உள்ளிட்ட, 2,538 பணியிடங்கள் நியமனங்களுக்கு லஞ்சம் பெறப்பட்டு உள்ளதால், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யக் கோரி, கடந்தாண்டு அக்., 27ல் தமிழக டி.ஜி.பி.,க்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது.
இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடும்படி, மதுரையைச் சேர்ந்த ஆதி நாராயணன் என்பவரும், அ.தி.மு.க., - எம்.பி., இன்பதுரையும் தனித்தனியே மனு தாக்கல் செய்தனர்.
மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், 'அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை உடனே வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கடந்த மாதம் 20ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், வழக்குப்பதிவு செய்யாத லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இன்பதுரை சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இன்பதுரை தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, ''நீதிமன்றம் உத்தரவிட்டு, 10 நாட்கள் கடந்தும், இதுவரை லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்யவில்லை,'' என்றார்.
அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''உடனடியாக வழக்குப் பதிவு செய்யும்படி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய, லஞ்ச ஒழிப்புத் துறை முடிவு செய்துள்ளது,'' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், மனுவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

