கரூர் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்கள்: ஆராயும் காவல்துறை
கரூர் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்கள்: ஆராயும் காவல்துறை
ADDED : செப் 29, 2025 04:02 PM

சென்னை: கரூர் துயரச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களை ஆராயும் நடவடிக்கைகளில் போலீசார் இறங்கி உள்ளனர்.
கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய்யின் பிரசாரக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள், இளம்பெண்களும் இதில் அடக்கம்.
தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. 2வது நாளாக விசாரணை நடந்து வரும் நிலையில், தமிழக காவல்துறையினரும் தங்களின் விசாரணை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.
குறிப்பாக, கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி? கூட்டத்தினரை யாரேனும் திசை திருப்பி விட்டனரா? என்பது பற்றிய புலன் விசாரணையில் தீவிரமாக இறங்கி உள்ளனர். அதன் முக்கிய அம்சமாக, சம்பவத்தின் போது சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட வீடியோக்களை போலீசார் ஆராயத் தொடங்கி உள்ளனர்.
இந்த வீடியோக்களில் உள்ள காட்சிகள், வெளியிடப்படும் விவரங்கள் அனைத்தும் உண்மைதானா? அவற்றை வெளியிட்டவர்கள் யார்? ஏதேனும் உள்நோக்கத்துடன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டனவா? என்பதை கண்டறிய விசாரணை நடத்த ஆரம்பித்து இருக்கின்றனர்.
இதற்காக, தேவைப்பட்டால் அந்த வீடியோக்களை வெளியிட்டவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர். முன்னதாக கரூர் சம்பவம் குறித்து எந்த வகையிலும் மக்கள் வதந்தி பரப்பக்கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தது, குறிப்பிடத்தக்கது.