200 தொகுதிகளில் வெற்றி; இலக்கு நிர்ணயித்தார் ஸ்டாலின்
200 தொகுதிகளில் வெற்றி; இலக்கு நிர்ணயித்தார் ஸ்டாலின்
ADDED : ஆக 16, 2024 12:18 PM

சென்னை: வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில் தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலவர் ஸ்டாலின் பேசியதாவது: மக்களுக்கு நலத்திட்டங்களை அளித்திருக்கிறோம். அதை ஓட்டுக்களாக மாற்ற களப்பணி அவசியம். ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் என்பதை மாவட்டச் செயலாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு. சுணக்கமின்றி தொடர்ந்து செயல்பட்டால் அடுத்த முறையும் தி.மு.க., ஆட்சி தான்.
மா.செயலாளர்கள் மீது புகார்கள்
திமுகவை சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் வந்திருக்கின்றன. மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்படும். அமெரிக்காவில் இருந்தாலும் கட்சியையும், ஆட்சியையும் கவனித்து கொண்டு தான் இருப்பேன்.
பதவிப் பறிப்பு
தி.மு.க., கவுன்சிலர்கள் யாராவது தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலர்கள் மீது பதவிப் பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தி.மு.க., அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

