ADDED : ஜன 18, 2024 02:05 AM
சென்னை:வடலுார் சத்ய ஞான சபையில் சர்வதேச மையம் அமைப்பதன் வாயிலாக வள்ளலாரின் பெருமையை குறைக்க தமிழக அரசு முயற்சிப்பதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை:
வள்ளலார் உருவாக்கிய வடலுார் சத்ய ஞான சபை, ஒளிக் கோவிலில் தைப்பூச நாளில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளியை, 70 ஏக்கர் பெருவெளியில் கூடியுள்ள பக்தர்கள், எந்த தடையும் இல்லாமல் தரிசிப்பர்.
இந்த இடத்தில்தான், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க, தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. இது வள்ளலாரின் பெருமையையும், செல்வாக்கையும் குறைக்கும் செயலாகும்.
பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைத்தால் நெரிசல் ஏற்பட்டு, தைப்பூச விழாவுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும்.
சத்ய ஞான சபை அதன் பொலிவை இழக்கும். பக்தர்களின் எண்ணிக்கையை குறைத்து, வள்ளலாரின் பெருமையையும் குறைக்க, தமிழக அரசு நினைக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. எனவே, தமிழக அரசு வள்ளலார் சர்வதேச மையத்தை வேறொரு இடத்தில் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.