போலீஸ் அனுமதியுடன் கள்ளுக் கடைகள். : திருக்கோவிலூர் பகுதியில் விற்பனை ஜோர்
போலீஸ் அனுமதியுடன் கள்ளுக் கடைகள். : திருக்கோவிலூர் பகுதியில் விற்பனை ஜோர்
ADDED : செப் 08, 2011 12:00 AM
விழுப்புரம்: திருக்கோவிலூர் பகுதியில் உள்ள கிராமங்களில், கள்ளுக் கடைகள் போலீஸ் அனுமதியுடன் ஜோராக நடக்கின்றன.
நாடார் பேரவை மற்றும் கள் விற்பனையாளர்கள் சங்கம் என்ற பெயரில், போலீசாருக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சுற்றுவட்டார கிராமங்களில், 15க்கும் மேற்பட்ட கிராமங்களில், கள் விற்பனை உச்சத்தை எட்டியுள்ளது. 'கள்' இறக்குவதற்கு அரசு தடை விதித்துள்ள போதிலும், திருக்கோவிலூர் பகுதி போலீசார், அதற்கு விலக்கு அளித்துள்ளனர். போட்டி அடிப்படையில் பேரம் பேசி, வாரந்தோறும் கணிசமான தொகை இதற்காக பெறப்படுகிறது. இதுவும் கீழ்மட்ட போலீசாருக்கு தெரியாமல் அரங்கேறியிருப்பதாக, சக போலீசாரே புலம்புகின்றனர். இது பற்றி உயர் அதிகாரிகளிடம் கூறினால், எதுவுமே தெரியாதது போல் நடிப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. ஆவியூர், கொளப்பாக்கம், கரடி, செங்கனாங்கொல்லை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில், கள்ளுக் கடைகள் வெளிப்படையாக நடத்தப்படுகின்றன. தாலுகா முழுவதிலும் இருந்து 'கள்' இறக்கப்படும் இடத்திற்கே இளைஞர்கள் படையெடுக்கின்றனர். இதனால், தேவையற்ற தகராறுகள், சச்சரவுகள் ஏற்படுவதாக, கிராம மக்கள் புலம்புகின்றனர். 'கள்' இறக்கி விற்பனை செய்ய ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கிய போலீசாருக்கு, எங்களின் மனமார்ந்த நன்றி எனக் கூறி, பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்கள் சார்பில், நக்கலாக போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இது திருக்கோவிலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட போலீசாருக்கு தெரியாமல் அப்பட்டமாக அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்த கூத்து, பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தீர்வை தேடித்தர வேண்டிய எதிர்க்கட்சியினர், பொறுப்பை தட்டிக் கழித்து வருகின்றனர். ஒரேயடியாக ஆட்சி மாற்றமே இதற்குக் காரணம் எனக்கூறி, பழியை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் அனுமதியுடன் இயங்கும் இந்த கள்ளுக் கடைகளை உடனடியாக அகற்றி, அரசின் மீதான பழியை அகற்ற, போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஆளும் கட்சி தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.