பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க இன்று முதல் 'டோக்கன்' வினியோகம்
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க இன்று முதல் 'டோக்கன்' வினியோகம்
ADDED : ஜன 04, 2026 02:32 AM

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பை, ரேஷன் கடைகளில் எந்த தேதியில் வாங்க வேண்டும் என்ற விபரம் எழுதப்பட்ட டோக்கனை, கார்டுதாரர்களின் வீடுகளில் ரேஷன் ஊழியர்கள் இன்று முதல் வினியோகம் செய்ய உள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு 2.22 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்துள்ளது.
இதில் ரொக்க பணம் குறித்த அறிவிப்பு, இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பை கார்டுதாரர்களுக்கு வழங்கும் திட்டத்தை, சென்னை நந்தம்பாக்கம் பட் ரோடு அருகில் உள்ள ரேஷன் கடையில், முதல்வர் ஸ்டாலின் வரும் 8ம் தேதி துவக்கி வைக்க உள்ளார்.
அன்று முதல், மாநிலம் முழுதும் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் துவங்குகிறது. அவற்றை வாங்க, கார்டுதாரர்கள் ஒரே சமயத்தில் கூட்டமாக வந்தால், கடைகளில் தள்ளுமுள்ளு ஏற்படும்.
இதை தடுக்க, ரேஷன் கடைக்கு, எந்த தேதி, எந்த நேரம் வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய டோக்கன், கார்டுதாரர்களின் வீடுகளில் வழங்கப்பட உள்ளது.
இந்த பணியில், ரேஷன் ஊழியர்கள் இன்று முதல் ஈடுபட உள்ளனர்.
இதற்காக, ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு பண்டக சாலைகள், சங்கங்கள் டோக்கன் அச்சிட்டு தயார் நிலையில் வைத்துள்ளன.

