டாமின் ஊழியர்களுக்கு 41 சதவீதம் அகவிலைப்படி நிலுவை இழுபறி
டாமின் ஊழியர்களுக்கு 41 சதவீதம் அகவிலைப்படி நிலுவை இழுபறி
ADDED : ஜன 28, 2025 12:43 AM

சிவகங்கை : தமிழ்நாடு கனிம வள நிறுவனங்களில் (டாமின்) பணிபுரியும் ஊழியர்களுக்கு 41 சதவீத அகவிலைப்படி உயர்வு தொகை கிடைப்பதில் இழுபறி நீடிக்கிறது.
தமிழ்நாடு அரசு சார்பில் கனிமவள நிறுவனம் 1978ல் துவக்கப்பட்டது. இந்நிறுவனம் மூலம் சுரங்கங்களில் இருந்து கிரானைட், சுண்ணாம்பு, மணல், வெர்மிகுலைட், கிராபைட் துகள் போன்றவை எடுக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகத்திலேயே தரமான 'கிராபைட் துகள்' சிவகங்கை அருகே கோமாளிபட்டியில் இயங்கும் ஆலையில் தான் எடுக்கப்படுகிறது. இத்துகள்கள் தங்கத்தை உருக்குவதற்கான உலை, பென்சில், ஆகாய விமான உதிரிபாகங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
இந்நிறுவனத்தின் கீழ் சென்னை மணலி, சிவகங்கை, திருச்சி, திருத்தங்கல், திருநெல்வேலி, சென்னை எண்ணுாரில் சிலிகான் உற்பத்தி ஆலை என ஆலைகள் செயல்படுகின்றன. இதில் 600 க்கும் மேற்பட்ட அலுவலர், ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ஆண்டு தோறும் இந்நிறுவனம் ரூ.92 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி வருகிறது.
அகவிலைப்படி இழுபறி
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகள் அகவிலைப்படி உயர்வு வழங்குகின்றனர். ஆனால், டாமின் நிறுவன ஊழியருக்கு 2017 ல் அறிவித்த 12 சதவீதத்தை தான் தற்போதும் வழங்கி வருகின்றனர். இதனால் தற்போது மற்ற அரசு ஊழியர், ஆசிரியர் பெறும் 53 சதவீத அகவிலைப்படியை பெற முடியாமல் உள்ளனர். 41 சதவீத அகவிலைப்படி உயர்வு தொகை கிடைக்காமல் டாமின் நிறுவன ஊழியர்கள் தவித்து வருகின்றனர். இதனால், ஒவ்வொரு ஊழியரும் மாதம் அகவிலைப்படி தொகை ரூ.25,000 முதல் 40,000 வரை இழந்து வருகின்றனர். டாமின் நிறுவனம் நிலுவையில் உள்ள 41 சதவீத அகவிலைப்படி தொகையை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
தி.மு.க., ஆதரவு தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் பல முறை முதல்வர் ஸ்டாலினிடம் இதுகுறித்து பல முறை மனு அளித்தும், நடவடிக்கை இல்லை எனவும் டாமின் ஊழியர்கள் புலம்புகின்றனர்.