ADDED : நவ 01, 2025 09:09 PM
சென்னை: பழனி, திருவண்ணாமலை உள்ளிட்ட 10 கோவில்களில், தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டியை, சென்னையில் நேற்று ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.
பின், அவர் கூறியதாவது:
முக்கிய கோவில்களில் உள்ள உலோகத் திருமேனிகளை பாதுகாக்கும் வகையில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள், எச்சரிக்கை மணி போன்ற வசதிகளுடன், 1,800 பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில், 80 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
கோவில்களின் வாடகை மற்றும் குத்தகை தொகை வசூல் செய்யும் பணியும் கணினிமயமாக்கப்பட்டு உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அருகில் உள்ள கோவில்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டி அமைக்கப்படும் என்றோம்.
அதன்படி இன்று, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், பழனி தண்டாயுதபாணி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட, 10 கோவில்களில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டியை துவக்கி வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

