பிரதமர் வருகைக்கு பின் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகரிப்பு
பிரதமர் வருகைக்கு பின் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகரிப்பு
UPDATED : பிப் 12, 2024 03:28 AM
ADDED : பிப் 12, 2024 03:23 AM

சென்னை: பிரதமர் மோடி வருகைக்கு பின், ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கூடுதல் வருவாய் கிடைப்பதால், அங்குள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில், சுற்றுலா பயணியருக்கான அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா, ஜன., 22ல் நடந்தது. இதற்காக, 11 நாட்கள் விரதம் இருந்த பிரதமர் மோடி, நாடு முழுதும் முக்கிய கோவில்களுக்கு சென்று வழிபட்டார்.
![]() |
ஜன., 19ல் சென்னை வந்த பிரதமர், மறுநாள் காலை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றார். மதியம் ராமேஸ்வரம் சென்ற அவர், கடல் மற்றும் புனித தீர்த்தங்களில் நீராடிய பின், ராமநாத சுவாமியை வழிபட்டார். அன்றிரவு ராமேஸ்வரத்தில் தங்கிய மோடி, அடுத்த நாள் காலை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்றார்.
அரிச்சல்முனையில் இருந்து தொலைநோக்கி கருவி வாயிலாக, இந்தியா - இலங்கை கடல் பகுதியில், ராமர் பாலம் இருந்ததாகக் கூறப்படும் இடங்களை பார்வையிட்டார்; பின், அரிச்சல்முனை கடற்கரையில் மலர்களை துாவி வழிபாடு செய்ததுடன், சிறிது நேரம் கடற்கரை ஓரத்தில் நாற்காலியில் அமர்ந்தார்.
இதனால், நாடு முழுதும் உள்ள மக்கள் தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதிக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது, அந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பலரும் அரிச்சல்முனையில் இருந்து, கடலில் உள்ள மணல் திட்டுக்களையும், தனுஷ்கோடியில் கடலில் மூழ்கி சேதமடைந்த சர்ச், ரயில் நிலையத்தையும் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.
இதனால், இதைச் சார்ந்து பிழைப்பு நடத்துவோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரிச்சல்முனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முன்பெல்லாம் ராமேஸ்வரம் கோவிலுக்கு வருவோரில், குழுவாக வருவோர் தான் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு வந்து செல்வர். பிரதமர் மோடி வருகைக்கு பின், கோவிலுக்கு வரும் பலரும் அரிச்சல்முனைக்கு வந்து, கடற்கரையில் அதிக நேரம் செலவிடுகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்களும் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்வது போல, விடுமுறை நாட்களில் காரில் அரிச்சல்முனை வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் வருவாய் கிடைக்கிறது
அரிச்சல்முனைக்கு வருவோரில் சிலர் மட்டுமே, தொலைநோக்கி கருவியில் மணல் திட்டை பார்ப்பர். அவர்களில் பலர், மணல் திட்டில் ராமர் வழிபட்டது, ராமர் பாலம் தொடர்பாக நாங்கள் கூறுவதை நம்ப மாட்டார்கள். ஆனால், இங்கு பிரதமர் மோடி வந்து, தொலைநோக்கி கருவியில், ராமர் பாலம் இருப்பதாகக் கூறப்படும் இடம், மணல் திட்டுக்களை பார்த்தார். அதன்பின், இங்கு வரும் சுற்றுலா பயணியர் பலரும், அதேபோல பார்க்க விரும்புகின்றனர்; காரணங்களையும் ஆர்வமுடன் கேட்கின்றனர். விடுமுறை நாட்களில் தினமும், 5,000 பேர்; மற்ற நாட்களில், 2,000 பேர் வரை வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. தினமும், 1,000 ரூபாய் கிடைப்பதே பெரிதாக இருந்த நிலையில், தற்போது நல்ல வருவாய் கிடைக்கிறது.
- சின்னகருப்பையா,
தொலைநோக்கி கருவி தொழிலாளி
கடலில் கிடைக்கும் கிளிஞ்சல் உள்ளிட்ட பொருட்களில் தயாரான அலங்காரப் பொருட்களை விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளேன். கோடை விடுமுறை உட்பட, அதிக விடுமுறை வரும் நாட்களில் தான், சுற்றுலா பயணியர் அதிகம் வருவர்; மற்ற நாட்களில் கூட்டம் இருக்காது. இதனால், வார நாட்களில் தினமும், 1,000 ரூபாய் வரையும்; விடுமுறை நாட்களில், 2,000 ரூபாய் வரையும் வருவாய் கிடைக்கும். பிரதமர் மோடி வருகைக்கு பின், சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், வார நாட்களில், 2,000 ரூபாயும்; விடுமுறை நாட்களில், 4,000 ரூபாய்க்கும் மேலும் வருவாய் கிடைக்கின்றன.
- ராமு, வியாபாரி


