தொடர் இரவு பணிக்கு எதிர்ப்பு ரயில் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
தொடர் இரவு பணிக்கு எதிர்ப்பு ரயில் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 25, 2025 01:35 AM

சென்னை:தொடர் இரவு பணி கூடாது உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி, சென்னை சென்ட்ரல் அருகில், தென் மண்டல ரயில்வே லோகோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதுகுறித்து, அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்கத்தின் மத்திய அமைப்பு செயலர் பாலச்சந்திரன் கூறியதாவது:
அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, 50 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதன்படி, ரயில்வே ஊழியர்கள் பெறும் பயணப்படியும் உயர்த்தப்பட்டது. ஆனால், 'லோகோ பைலட்'கள் பெற்று வரும் கிலோ மீட்டர் அலவன்ஸ் மட்டும், 25 சதவீதம் உயர்த்தப்படவில்லை.
எனவே, இந்த கிலோ மீட்டர் அலவன்ஸை உடனடியாக உயர்த்த வேண்டும். லோகோ பைலட்டுகள் பெற்று வரும் கிலோ மீட்டர் அலவன்ஸ், பயணப்படிக்கு பதிலாக பெற்று வருவதால், 70 சதவீதம் வருமான வரி விலக்கு உள்ளது; இதை அமல்படுத்த வேண்டும்.
பணியின்போது உணவு இடைவேளை, இயற்கை உபாதைகளுக்கும் நேரத்தை வரையறுக்க வேண்டும். தொடர் இரவு பணிகள் தவிர்க்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்க பொதுச்செயலர் ஜேம்ஸ், தென் மண்டல தலைவர் குமரேசன் உட்பட, 100க்கும் மேற்பட்ட ரயில் ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.