ADDED : ஆக 26, 2025 10:58 PM
சென்னை:ரயில்வே காலி பணியிடங்களில், ஓய்வு பெற்ற ரயில் ஓட்டுநர்களை நியமனம் செய்வதை கண்டித்து, அகில இந்திய லோகோ ஓட்டும் தொழிலாளிகள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தாம்பரம், திருச்சி, மதுரை, கோவை ரயில்வே அலுவலகங்கள் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ரயில் ஓட்டுநர்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இது குறித்து தொழி லாளிகள் சங்கத்தினர் கூறியதாவது:
லட்சக்கணக்கான இளைஞர்கள், வேலையின்றி தவிக்கும் நிலையில், நிரந்தரமான ரயில் ஓட்டுநர்களை நியமிக்காமல், ஓய்வு பெற்றவர்களை ரயில்வே நியமனம் செய்ய உள்ளது. இது, ரயில் ஓட்டுநர்களின் பிரச்னைக்கு தீர்வாகாது. எனவே, ரயில்வே இந்த உத்தரவை திரும்ப பெற்று, புதிதாக நிரந்தரமாக பணி நியமனம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

