ரயில் பயணி தவறவிட்ட 50 பவுன் நகை: பத்திரமாக ஒப்படைத்தார் போலீஸ் மணிகண்டன்!
ரயில் பயணி தவறவிட்ட 50 பவுன் நகை: பத்திரமாக ஒப்படைத்தார் போலீஸ் மணிகண்டன்!
ADDED : ஆக 31, 2025 10:56 AM

சென்னை: சென்னையில் இருந்து கோவைக்கு ரயிலில் வந்த ரவிக்குமார் குடும்பத்தினர், ரயிலில் தவறவிட்ட 50 பவுன் நகை கொண்ட கைப்பையை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் மணிகண்டன், அதை உரியவர்களிடம் ஒப்படைத்தார். மணிகண்டனின் பணியை, உயர் அதிகாரிகள், ரயில் பயணிகள் அனைவரும் பாராட்டினர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு ரவிக்குமார், 53, என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் ரயிலில் வந்தார். கோவையில் வந்து இறங்கிய அவர், பைகள் அனைத்தையும் எடுத்து கொண்டு வீடு திரும்புவதில் கவனம் செலுத்தினர். அப்போது அவர் 50 பவுன் நகை, ரூ.11 ஆயிரம் பணம் ஆகியவற்றை பை உடன் தவறவிட்டு சென்றுவிட்டார்.
பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு ஒவ்வொரு பெட்டியாக சென்று ரயில்வே பாதுகாப்பு படையினர் பார்வையிடுவது வழக்கம். அவ்வாறு சென்ற ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் மணிகண்டன், கைப்பையை கவனித்து எடுத்தார். அதில் 50 பவுன் நகை, பணம் ஆகியவை இருப்பதைக் கண்டு போலீசில் ஒப்படைத்தார்.
வீட்டுக்குச் சென்றதும், கைப்பையை தவற விட்டதை உணர்ந்த ரவிக்குமார் குடும்பத்தினர், அவசரம் அவசரமாக ரயில் நிலையத்துக்கு ஓடோடி வந்தனர். கைப்பையை தவறவிட்டோம் என்று கூறிய அவர்களிடம், உரிய விசாரணைக்கு பிறகு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், நகை, பணம் இருந்த பையை ஒப்படைத்தனர்.
ரூ. 38 லட்சம் மதிப்புடைய நகை திரும்ப கிடைத்ததால், போலீஸ் மணிகண்டனுக்கு, ரவிக்குமார் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். நேர்மையாக செயல்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் மணிகண்டனை, உயர் அதிகாரிகள், சக போலீசார், ரயில் பயணிகள் அனைவரும் பாராட்டினர்.
போலீஸ் மணிகண்டனை பாராட்டி உங்களது வாழ்த்துக்களையும், கருத்துக்களையும் கமென்ட் செய்யுங்க மக்களே!