மா.செ.,க்களுக்கு பயிற்சி: விஜய் கட்சியில் துவக்கம்
மா.செ.,க்களுக்கு பயிற்சி: விஜய் கட்சியில் துவக்கம்
ADDED : ஏப் 12, 2025 06:10 AM

சென்னை : மாவட்டச் செயலர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து, த.வெ.க.,வில் பயிற்சி வகுப்பு, நேற்று துவங்கியது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு, 120 மாவட்ட செயலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். நடிகர் விஜய் நடித்த படங்களை ரசித்து பழகிய மாவட்ட செயலர்கள், கட்சி நிகழ்ச்சிகளில் முன்வரிசையில் அமர்ந்து, விசில் அடிப்பது, கட்சித்துண்டை தலைக்கு மேல் சுற்றி ஆட்டம் போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களை பார்த்து, பின்வரிசையில் அமர்ந்துஇருக்கும் கட்சி நிர்வாகிகளும், ஆட்டம் போடுகின்றனர். மற்ற கட்சியினர் இதை கிண்டலடித்து வருகின்றனர். இதை விஜய் கவனத்திற்கு, அக்கட்சியில் புதிதாக சேர்ந்துள்ள ஆதவ் அர்ஜுனா, நிர்மல் ஆகியோர் கொண்டு சென்றனர்.
இதையடுத்து, மாவட்ட செயலர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்க, விஜய் ஏற்பாடு செய்தார். அதன்படி, சென்னை, பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், பொதுச்செயலர் ஆனந்த் தலைமையில் நேற்று, மாவட்டச் செயலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.