UPDATED : ஏப் 09, 2025 04:16 AM
ADDED : ஏப் 09, 2025 01:33 AM

சென்னை: சட்டசபை நேரடி ஒளிபரப்பில், அ.தி.மு.க.,வினர் பேசுவது இருட்டடிப்பு செய்யப்படுவதாக, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி நேற்று குற்றஞ்சாட்டினார்.
இதற்கு, சபாநாயகர் அப்பாவு அளித்த விளக்கம்:
எதிர்க்கட்சி தலைவர் கூறும் குற்றச்சாட்டு தவறானது. முதல்வர் உத்தரவுப்படி, 2021 செப்டம்பர் முதல், சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக, அதிகாரிகளை பல மாநிலங்களுக்கு அனுப்பி ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, கேள்வி நேரத்தை மட்டும் நேரடி ஒளிபரப்பு செய்கிறோம்.
அதுமட்டுமின்றி, 110 விதியின் கீழ் முதல்வரின் அறிவிப்புகள் முழுமையாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. கவன ஈர்ப்பில் அமைச்சர்கள் பதில் இருந்தால், அதுவும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
விரைவில், சபை நிகழ்ச்சிகள் அனைத்தும் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இதற்காக, எம்.எல்.ஏ.,க்களுக்கு பயிற்சி அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
எம்.எல்.ஏ., ஒருவர் பேசும் வார்த்தைகள், சமூகத்திற்கு நன்மை பயக்கும் வகையில் இருக்க வேண்டும். அதற்காகத்தான் எம்.எல்.ஏ.,க்களுக்கு பயிற்சி. இவ்வாறு சபாநாயகர் கூறினார்.

