UPDATED : டிச 01, 2024 12:50 AM
ADDED : டிச 01, 2024 12:32 AM

சென்னை: கனமழையால், விரைவு ரயில்கள் போக்குவரத்தில், 30 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்பட்டது. சில ரயில்கள், கடற்கரை, ஆவடி, திருவள்ளூரில் இருந்து இயக்கப்பட்டன.
ராமேஸ்வரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வைகை விரைவு ரயில்கள் நேற்று, 15 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக சென்னை எழும்பூர் வந்தன. திருநெல்வேலி - எழும்பூர், 'வந்தே பாரத்' ரயில், நேற்று ஒரு மணி நேரம் தாமதமாக வந்தது.
இதேபோல், எழும்பூர் - புதுடில்லி ஜி.டி., விரைவு ரயில் உட்பட சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
இடம் மாற்றம்
சென்னை பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி ஜீவா இடையே ரயில் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியதால், சென்ட்ரலில் இருந்து செல்ல வேண்டிய சில ரயில்கள், திருவள்ளூர், ஆவடியில் இருந்து நேற்று இயக்கப்பட்டன
திருப்பதி - சென்ட்ரல், கோவை - சென்ட்ரல் ரயில்கள் ஆவடி வரையிலும், மைசூரு - சென்ட்ரல், மங்களூரு - சென்ட்ரல் விரைவு ரயில்கள் திருவள்ளூர் வரை மட்டுமே இயக்கப்பட்டன
சென்ட்ரல் - கோவை, சென்ட்ரல் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு, சென்ட்ரல் - ஈரோடு உள்ளிட்ட ஆறு விரைவு ரயில்கள், சென்னை கடற்கரையில் இருந்து நேற்று இயக்கப்பட்டன.