கவரைப்பேட்டையில் சீரமைப்பு பணிகள் நிறைவு: இரு மார்க்கத்திலும் ரயில்கள் இயக்கம்
கவரைப்பேட்டையில் சீரமைப்பு பணிகள் நிறைவு: இரு மார்க்கத்திலும் ரயில்கள் இயக்கம்
ADDED : அக் 14, 2024 12:26 AM

கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டையில், ரயில் பாதை சீரமைப்பு பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டதால், நேற்று காலை முதல் இரு மார்க்கத்திலும் ரயில்கள் இயக்கப்பட்டன.
கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து சென்னை வழியாக பீஹார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. கடந்த 11ம் தேதி, சென்னையில் இருந்து பீஹார் நோக்கி சென்ற இந்த ரயில், இரவு, 8:27 மணி அளவில், திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில், லுாப் லைனில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில், 13 பெட்டிகள் தடம் புரண்டன. அதில், ஜெனரேட்டர் பெட்டி உட்பட ஐந்து ஏ.சி., பெட்டிகள் கவிழ்ந்தன. ரயில் பாதைகளில் சேதம் ஏற்பட்டு, இரு மார்க்கத்திலும், ரயில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
மீட்பு குழுவினர், நேற்று முன்தினம் இரவு முதல் துரிதமாக செயல்பட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
விபத்து நடந்த இடத்தில், சிதறி கிடந்த பெட்டிகளை கிரேன் வாயிலாக, ரயில் பாதையின் ஓரமாக அப்புறப்படுத்தினர். தடம் புரண்ட பெட்டிகள் மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டு, மாற்று இன்ஜின் மூலம் கொண்டு செல்லப்பட்டன. முதற்கட்டமாக, சென்னை நோக்கி செல்லும் ரயில் பாதையில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டன.
நேற்று காலை சீரமைப்பு பணிகள் முழுதும் முடிக்கப்பட்டதால், 9:20 மணி முதல் இரு மார்க்கத்திலும் ரயில்கள் இயக்கப்பட்டன. காலை 11:00 மணிக்கு மேல் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வழக்கம் போல புறநகர் மின்சார ரயில்களும் இயங்கின. 'லுாப் லைனில்' விபத்துக்குள்ளான விரைவு ரயிலின் இன்ஜினை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.