தி.மு.க.,வுடன் பயணிப்பது முரண்பட்ட அரசியல்தான்: திருமாவளவன்
தி.மு.க.,வுடன் பயணிப்பது முரண்பட்ட அரசியல்தான்: திருமாவளவன்
UPDATED : செப் 19, 2024 03:28 AM
ADDED : செப் 18, 2024 10:56 PM

சென்னை:வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி:
தமிழகம் மட்டுமல்ல, பீஹார், குஜராத், நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களை தவிர, அனைத்து மாநிலங்களிலும் மதுவிலக்கு இல்லை.
இதனால், மனிதவளம் பாழாகிறது. தேசிய அளவிலான மதுவிலக்கு சட்டத்தை வரையறுக்க வேண்டும்; கண்டிப்பாக மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். இதில் தி.மு.க.,வும் முழு உடன்பாடு கொண்டுள்ளது.
முதல்வரை சந்தித்த பிறகும், எங்களது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. துணை முதல்வர் பதவி, அவர்களது தேவையைப் பொறுத்தது. அது, அவர்களது சுதந்திரம்.
தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் உள்ளன. மக்கள் பிரச்னையான மதுவிலக்கை வலியுறுத்தி மாநாடு நடத்துவதை, தேர்தல் கணக்கு, கூட்டணி கணக்கு என்று கூப்பாடு போட்டனர்.
எப்படியாவது கூட்டணியில் விரிசல், பிளவு ஏற்படாதா என்று பலரும் காத்திருந்தனர்; ஏமாந்து போயினர். அவர்கள் மூக்குதான் அறுபட்டுள்ளது. அதனால் ஏற்பட்ட விரக்தி அவர்களிடம் வெளிப்படுகிறது.
வி.சி.,யும் தி.மு.க.,வும் ஒரே நேர்கோட்டில் கொள்கையளவில் பயணிக்கின்றன. முரண்பாடான அரசியல் தான். ஆனால், இணைந்து பயணிப்போம்; கொள்கை தளத்தில் இணையாக இருக்கிறோம்.
தி.மு.க.,வும், விடுதலை சிறுத்தைகளும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கின்றன; அதே நேரம், தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை வேண்டும் என்று சொல்கிறோம். இதில் எங்கும் முரண்பாடு இல்லை.
இவ்வாறு கூறினார்.

