வன நிலங்களை ஆக்கிரமிக்க பழங்குடியினரை கேடயமாக பயன்படுத்துகின்றனர்: ஐகோர்ட்
வன நிலங்களை ஆக்கிரமிக்க பழங்குடியினரை கேடயமாக பயன்படுத்துகின்றனர்: ஐகோர்ட்
ADDED : பிப் 13, 2025 04:28 AM

சென்னை: ஒரு சிலர் தங்கள் தனிப்பட்ட நலனுக்காக, வன நிலங்களை ஆக்கிரமிக்க பழங்குடியினரை கேடயமாக பயன்படுத்துவதாக தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 'இனி ஒரு அடி கூட விவசாய நிலமாக மாற்றப்படவில்லை என்பதை, வனத் துறை உறுதி செய்ய வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.
ஊட்டியில் இருந்து, 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது க்ளென்மோர்கன் கிராமம். இங்கு, 400 ஏக்கர் பரப்பளவில் வன நிலங்களை, சட்டவிரோதமாக விவசாய நிலங்களாக மாற்றி, ஆக்கிரமிப்பு செய்ததாக, 115 பழங்குடியினர் மீதான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீலகிரி ஆதிவாசி நலச் சங்கத்தின் செயலர் எம்.ஆல்வாஸ் வாதாடியதாவது:
மேய்ச்சல் நோக்கத்துக்காக, 10,000 ஏக்கர் பரப்பளவு வனப் பகுதி, பழங்குடியினருக்கு வழங்கப்பட்டது. தோடா, கோட்டா ஆகிய இரு சமூகத்தில், 98 பழங்குடியினர், 400 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்கின்றனர்.
மேய்ச்சல் செய்து வந்த பழங்குடியினரை, யூகலிப்டஸ் போன்ற மரங்களை நட்டு, அதிலிருந்து பணம் ஈட்டும் வகையில், பழங்குடியினரை வனத்துறை தான் நிர்பந்தித்தது.
எனவே, பழங்குடி மக்களை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். பழங்குடி நல அமைச்சகத்தின் செயலர், நீலகிரி கலெக்டர் மற்றும் மாநில பழங்குடி நலத் துறையை, வழக்கில் இணைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வாதாடினார்.
பழங்குடி மக்கள் சார்பாக வழக்கறிஞர் ஆர்.ராஜகோபால் ஆஜராகி, ''பழங்குடியினர், ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல. அவர்களுக்கு, வன நிலத்தில் உரிமை உள்ளது,'' என்றார்.
நீதிபதிகள் கூறியதாவது:
பழங்குடியினர் இயற்கையோடு வாழ்ந்து, வனங்களை பாதுகாக்கின்றனர் என்பதில், எவ்வித மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஆக்கிரமிப்புகள், 400 ஏக்கர் அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளன. ஒரு சிலர், தங்களின் தனிப்பட்ட லாபத்துக்காக, பழங்குடியினரை கேடயமாக பயன்படுத்துகின்றனர். இதை நிரூபிக்க முடியும்.
பழங்குடியினரின் உரிமைகளை தடுக்கவில்லை. ஆக்கிரமிப்புகள் திட்டமிட்டு நடத்தப்படுவதால்,இதை அனுமதிக்க முடியாது. பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களில், பழங்குடியினர் அல்லாதவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். மொத்தமுள்ள நிலத்தில், 70 சதவீதநிலம் வரை பழங்குடியினர் அல்லாதவர்களே பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்க வழக்கறிஞர் சி மோகன், ''வன நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு ஆதாரங்கள் உள்ளன. மூன்றாம் தரப்பினருக்கு, நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டிருந்தால், அதை மீட்க வேண்டும்,'' என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, மேய்ச்சல் நிலத்தை மீட்டெடுப்பதில், அதிக அக்கறை கொண்டுள்ளோம். இதுதொடர்பாக, நீலகிரி மாவட்ட கலெக்டர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தற்போது, விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் நிலங்கள், மேலும் விரிவடையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இனி, பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு அடி நிலம் கூட, விவசாய நிலங்களாக மாற்றப்படவில்லை என்பதை, வனத்துறை உறுதி செய்ய வேண்டும். பழங்குடியினருக்கான 400 ஏக்கர் பரப்பளவை அளவீடு செய்து, எல்லையை வரையறுக்க வேண்டும். வழக்கின் விசாரணை, மார்ச் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.