ஒரு தரப்பினருக்கு ஆதரவான உத்தரவு கோரி நிர்பந்தம்: வழக்கு விசாரணையில் இருந்து தீர்ப்பாய நீதிபதி விலகல்
ஒரு தரப்பினருக்கு ஆதரவான உத்தரவு கோரி நிர்பந்தம்: வழக்கு விசாரணையில் இருந்து தீர்ப்பாய நீதிபதி விலகல்
UPDATED : ஆக 26, 2025 04:04 PM
ADDED : ஆக 26, 2025 03:57 PM

சென்னை: ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட வலியுறுத்தி அழுத்தம் தரப்படுவதால் தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாய வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி சரத்குமார் சர்மா விலகினார்.
தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இதில், நிறுவனங்கள் தொடர்புடையஇரண்டு தரப்பினர் இடையிலான வழக்கை நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர்.
வழக்கில் ஒரு குறிப்பிட்ட தரப்புக்கு சாதகமான தீர்ப்பை வழங்குமாறு உயர் நீதித்துறையின் மதிக்கப்படும் உறுப்பினர் ஒருவர், நீதிபதி சரத்குமார் சர்மாவை அணுகியுள்ளார்.
இதனால் வருத்தம் அடைந்த நீதிபதி சரத்குமார் சர்மா, குறிப்பிட்ட இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக வெளிப்படையாக அறிவித்தார்.
இது தொடர்பான வழக்கு சென்னை தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாய நீதிபதி ஜதிந்திரநாத் ஸ்வைன் தலைமையிலான அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையில்,
'எங்கள் நீதிபதிகளில் ஒருவரிடம், ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு ஆதரவாக உத்தரவு கோரி அணுகப்பட்டதைக் கண்டு நாங்கள் வேதனைப்படுகிறோம்' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஒரு நீதிபதி விலகிய நிலையில், வழக்கை விசாரிக்க புதிய பெஞ்ச் அமைக்கப்பட உள்ளது.
உயர் நீதித்துறையைச் சேர்ந்த ஒருவர் தன்னை அணுகியதாக நீதிபதி வெளிப்படையாக கூறியிருப்பது, சட்டம் மற்றும் நீதித்துறையினர், கார்ப்பரேட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல ஏற்கனவே கடந்த நவம்பர் 2024 இல், நீதிபதி சரத்குமார் சர்மா, வேறு ஒரு வழக்கில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.