ADDED : டிச 05, 2024 02:07 PM

சென்னை: 'ஆப்ட்ரால் நீ ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரி, எத்தனை ஆண்டுகள் இந்த பதவியில் இருந்து விடுவாய். வா, மோதிப் பார்த்து விடுவோம்' என்று திருச்சி எஸ்.பி., வருண்குமாருக்கு, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் எஸ்.பி.,யாக பணியாற்றும் வருண்குமாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் சில ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாநாட்டில் பேசிய வருண்குமார், நாம் தமிழர் கட்சியினர் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை கூறினார்.
தன்னையும், தன் மனைவி, குழந்தைகளை பற்றி அவதுாறு செய்வதாகவும், படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் பதிவிடுவதாகவும் குற்றம் சாட்டினார். அவருக்கு பதிலளிக்கும் வகையில் கோவையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: உனக்கு மட்டும் தான் மனைவி, குழந்தைகள் உள்ளனரா, எங்களுக்கு இல்லையா? நீ என்ன சேட்டை செய்து எங்க குடும்பத்தை இழிவு செய்தாய்?
இதற்கெல்லாம் வழக்கு எடுப்பாயா? இந்த அதிகாரம், நீ இந்த காக்கிச்சட்டைல எத்தனை வருஷம் இருந்துடுவ? ஒரு 50 வருஷம், ஒரு 30 வருஷம் இருப்பயா? அதன் பிறகு இறங்கி தான் ஆக வேண்டும். ஆனால் நாங்க இங்கதான் இருப்போம்.
பார்த்து பேசுங்க, உறுதிமொழி எடுக்கும்போது இப்படித்தான் எடுத்தாயா, எனது கட்சியை குறை சொல்வதற்கு தான் ஐ.பி.எஸ்., ஆகி வந்து இருக்கிறாயா? சரி மோதுறதுன்னு ஆகிடுச்சு வா மோதுவோம், நீ என்ன பண்ணிருவ? After all நீ ஒரு ஐ.பி.எஸ்., இவ்வாறு சீமான் கூறினார்.