பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் தவிர்க்க நாளை நடக்கிறது முத்தரப்பு பேச்சு
பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் தவிர்க்க நாளை நடக்கிறது முத்தரப்பு பேச்சு
UPDATED : ஜன 06, 2024 09:28 PM
ADDED : ஜன 06, 2024 09:13 PM
சென்னை:போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் உறுதியாக இருப்பதால், 8ம் தேதியான நாளை முத்தரப்பு பேச்சு நடத்த, தொழிலாளர் நல ஆணையம் அழைப்பு விடுத்து உள்ளது.
'தமிழக போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை, அரசு பட்ஜெட்டில் ஒதுக்கி வழங்க வேண்டும்; 15வது புதிய ஊதிய ஒப்பந்த பேச்சை துவங்க வேண்டும்.
ஓய்வூதியர் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும்' உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை மறுதினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன.
வாய்ப்பு
கோரிக்கைகள் தொடர்பாக, இதுவரை நடந்த மூன்று கட்ட பேச்சில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
அதனால், வேலைநிறுத்த போராட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்தன.
இதற்கிடையில், நாளை முத்தரப்பு பேச்சு நடத்த தொழிற்சங்கங்கள், போக்குவரத்து கழக நிர்வாகங்களுக்கு, தொழிலாளர் நல ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. அதன் அறிவிப்பில், மேலும் கூறியிருப்பதாவது:
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நடந்த பேச்சில், இதர கோரிக்கைகள் தொடர்பாக பொங்கலுக்கு பின்னர் பேசலாம். ஓய்வூதியர் அகவிலைப்படி உயர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதை நிர்வாகம் தரப்பில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதால், வரும் 19ம் தேதிக்கு பேச்சு ஒத்திவைக்கப்பட்டது.
இதில், உடன்பாடு ஏற்படாததால், நாளை மறுதினம் முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
வேலை நிறுத்தம் போன்ற நேரடி நடவடிக்கைகளால், பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது.
நடவடிக்கை வேண்டாம்
எனவே, நாளை நண்பகல் 12:00 மணிக்கு டி.எம்.எஸ்., அலுவலகத்தில், தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலையில் நடைபெறும் முத்தரப்பு பேச்சில் தொழிற்சங்கங்கள், அனைத்து போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
வேலைநிறுத்தம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் தலையிட வேண்டும்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்பது எங்களின் விருப்பம் அல்ல. இருப்பினும், நீண்ட காலமாக இருக்கும் கோரிக்கைகளுக்கு தீர்வு எட்டாத நிலையில் போராட்டத்திற்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே, இனியும் தாமதிக்காமல், முதல்வர் நேரடியாக தலையிட்டு, கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
ஆறுமுகம்,
பொதுச்செயலர், ஏ.ஐ.டி.யு.சி.,
அமைச்சர் என்ன செய்கிறார்?அண்ணாமலை சந்தேகம்
பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:
போக்குவரத்து தொழிலாளர்
சங்கங்கள், வரும் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட
போவதாக அறிவித்துள்ளன. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஒவ்வொரு
துறையிலும், தங்கள் கையலாகாத்தனத்தை வெளிப்படுத்தி கொண்டே இருக்கிறது.
தொழிலாளர்களிடம்
உரிய முறையில் பேச்சு நடத்தி, அவர்கள் குறைகளை தீர்க்க நடவடிக்கை
எடுத்திருக்க வேண்டிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பொங்கலுக்கு
பின் பேச்சு நடத்திக் கொள்ளலாம் என்று, அவர்கள் வயிற்றில்
அடித்திருக்கிறார்.
பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்காமல், அதை
தள்ளிப்போட மட்டுமே முயற்சி செய்கிறார். போக்குவரத்து துறை ஊழியர்கள்
பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டாமா?
தமிழகம் முழுதும் அடுத்த இரு
வாரங்களும் லட்சக்கணக்கான மக்கள், அரசு போக்குவரத்தை நம்பி இருக்கும்
சூழலில், தி.மு.க., அரசின் திறன்யின்மையால், பண்டிகை காலத்தில் பொது
மக்களும், தொழிலாளர்களும் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
தனியார்
போக்குவரத்து நிறுவனங்கள், பஸ் கட்டணத்தை மிக அதிகமாக உயர்த்தி பயன் பெற,
அமைச்சர் செய்யும் கூட்டுச்சதியா என்ற கேள்வியையே எழுப்பி இருக்கிறது.
காலம் தாழ்த்தி, பிரச்னையை தள்ளி போடும் உத்தி இல்லாமல், தொழிலாளர்கள்
குறைகளை களைய, அமைச்சரும், தி.மு.க., அரசும் முன்வர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
அதிருப்தி பணியாளர் யார்? ரகசிய கணக்கெடுப்பு
போக்குவரத்து
தொழிற்சங்கங்கள், நாளை மறுதினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த
போராட்டத்தில் இறங்க உறுதியாக இருக்கின்றன. தொழிற்சங்கங்களுக்கு
பணியாளர்களிடம் ஆதரவு உள்ளதா? போராட்டத்தில் பங்கேற்காத தொழிற்சங்கங்களின்
பணியாளர்களை கொண்டு பாதிப்பு இல்லாமல், பஸ்களை இயக்க முடியுமா என்ற
கோணத்தில், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், போக்குவரத்து பணிமனைகளில்
ரகசியமாக கணக்கெடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து, போக்குவரத்து கழக
அதிகாரிகளிடம் கேட்ட போது, 'பொங்கல் பண்டிகை நெருங்க உள்ளதால், தேவையில்லாத
விடுப்புகளை தவிர்த்து, அனைத்து பணியாளர்களும் பணிக்கு வந்து முழு அளவில்
பஸ்களை இயக்குவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம்' என்றனர்.