த.வெ.க., -- -மா.செ., மதியழகனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
த.வெ.க., -- -மா.செ., மதியழகனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
ADDED : அக் 10, 2025 02:39 AM

கரூர்: கரூர் துயர சம்பவம் தொடர்பாக, த.வெ.க., மாவட்டச் செயலர் மதியழகனை இரண்டு நாள் காவலில் விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், இணை செயலர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலர் மதியழகன் உட்பட பலர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதியழகன், அவருக்கு அடைக்கலம் கொடுத்த கரூர் மாநகர த.வெ.க., பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கரூர் சம்பவ வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, மதியழகனை காவலில் எடுத்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழு சார்பில் கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று விசாரணைக்காக நீதிமன்றத்தில் மதியழகன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, மதியழகனை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு அனுமதி வழங்கக் கூடாது என மதியழகன் தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பரத்குமார், இரண்டு நாள் போலீஸ் காவலில் மதியழகனை விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
மேலும், மதியழகன் தினசரி எடுத்துக் கொள்ளும் மருந்துகளுக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும், விசாரணையின்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.