தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க த.வெ.க., - எம்.எல்.ஏ.,வுக்கு தடை

 நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க த.வெ.க., - எம்.எல்.ஏ.,வுக்கு தடை

 நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க த.வெ.க., - எம்.எல்.ஏ.,வுக்கு தடை


ADDED : மே 13, 2026 12:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 12:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்துார் தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., சீனிவாச சேதுபதி, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு போன்ற நடைமுறைகளில் பங்கேற்க, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சட்டசபை தேர்தலில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்துார் தொகுதியில், ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற, த.வெ.க., வேட்பாளர் சீனிவாச சேதுபதி, சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்க கோரி, அவரை எதிர்த்து போட்டியிட்ட, தி.மு.க., வேட்பாளரான முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இடைக்கால உத்தரவு இந்த மனு, கோடை விடுமுறை கால நீதிபதிகள் எல்.விக்டோரியா கவுரி, என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன், அவசர வழக்காக நேற்று விசாரிக்கப்பட்டது.

தேர்தல் கமிஷன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், வழக்கறிஞர் தருண் ராவ் கல்லகுரு; பெரியகருப்பன் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, என்.ஆர்.இளங்கோ; சீனிவாச சேதுபதி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, வி.ராகவாச்சாரி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு:

ஒரு தொகுதிக்கான தபால் ஓட்டு, அந்த தொகுதியின் பெயரை கொண்ட மற்றொரு தொகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது தொடர்பான இந்த வழக்கு வித்தியாசமானது. இதுபோன்ற சூழ்நிலைகளில், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சட்டத்தில் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல தேர்தல் வழக்கில், இதை காரணமாக முன்வைக்க சட்டத்தில் இடமில்லை.

ஓட்டு எண்ணிக்கை செயல்முறை முடிவடைவதற்கு முன், தவறான இடத்துக்கு அனுப்பப்பட்டதாக ஒப்புக்கொள்ளப்பட்ட தபால் ஓட்டை, அதன் சரியான தொகுதிக்கு திருப்பி தர, அதிகாரிகள் தவறியதே தோல்விக்கு காரணம்.

ஓட்டுகளை முறையற்ற வகையில் ஏற்றது, நிராகரித்தது, ஊழல் நடவடிக்கை, சட்டவிதிகளை பின்பற்றாதது போன்ற காரணங்களை கூறித் தான், தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய முடியும்.

ஆனால், சர்ச்சைக்குரிய தபால் ஓட்டையும், வீடியோ பதிவையும் பாதுகாக்க கோரிய இந்த வழக்கை, வழக்கமான தேர்தல் வழக்காக கருத முடியாது என்பதால், இந்த மனு விசாரணைக்கு உகந்தது.

மேலும், ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளதால், இந்த வழக்கை முக்கியமற்றதாகவும் கருத முடியாது. ஏனெனில், ஒரு அரசு நீடிப்பதும், கவிழ்வதும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் தான்.

வெற்றி செல்லாது எனவே, சம்பந்தப்பட்ட த.வெ.க., - எம்.எல்.ஏ., நம்பிக்கை ஓட்டெடுப்பில், பங்கேற்றால், அது முக்கியமானதாக அமையும். இருப்பினும், தற்போதைய நிலையில், சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க முடியாது.

அரசியலமைப்பு சட்டப்படி நடுநிலையை பாதுகாக்க, நம்பிக்கை ஓட்டெடுப்பில், த.வெ.க., - எம்.எல்.ஏ., பங்கேற்க தடை விதிப்பதால், எந்த பாதிப்பும் அவருக்கு ஏற்படாது.

நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க அவரை அனுமதிப்பது, இவ்வழக்கின் மனுதாரரான தி.மு.க., வேட்பாளருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தேர்தல் புனிதத்தை பாதுகாக்க வேண்டிய திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ள திருப்பத்துார் தொகுதி தேர்தல் அதிகாரி, வேறு தொகுதிக்கு சொந்தமான தபால் ஓட்டை, அந்த தொகுதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

மாறாக, அதை விடுத்து, தொகுதி மாறி அனுப்பப்பட்ட தபால் ஓட்டு நிராகரிக்கப்பட்டு உள்ளது.

எனவே, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, த.வெ.க., - எம்.எல்.ஏ., சீனிவாச சேதுபதி சட்டசபை நம்பிக்கை தீர்மானம், நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்ட ஓட்டளிப்பு நடைமுறைகளில் பங்கேற்கக் கூடாது.

த.வெ.க., - எம்.எல்.ஏ., வெற்றி பெற்றதை செல்லாது என, அறிவிக்கப்பட்டதாகவோ; மனுதாரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவோ, இந்த உத்தரவை கருத முடியாது; மறு எண்ணிக்கை நடத்த பிறப்பிக்கப்பட்டதாகவும் கருதக் கூடாது.

மறு கணக்கீடு சிவகங்கை மாவட்டம், திருப்பத்துார் தொகுதியில் நடந்த ஓட்டு எண்ணிக்கை தொடர்பான ஆதாரங்களை, தேர்தல் கமிஷன் பாதுகாக்க வேண்டும்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்துார் தொகுதிக்கு உரிய தபால் ஓட்டை, திருப்பத்துார் மாவட்டம், திருப்பத்துார் தொகுதியில் பெற்றிருந்தால், அதை அடையாளம் கண்டு பிரித்து, 'சீல்' வைத்து பாதுகாக்க வேண்டும்.

மேலும், தபால் ஓட்டு எண்ணிக்கை, சரிபார்ப்பு, நிராகரிப்பு தொடர்பான வீடியோ பதிவுகளையும் பத்திரப்படுத்த வேண்டும். எந்த ஆவணங்களையும் மாற்றவோ, அழிக்கவோ கூடாது.

மறு ஓட்டு எண்ணிக்கை, மறு கணக்கீடு, ஓட்டுச்சீட்டுகளை மீண்டும் திறத்தல், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளில் தலையிடுதல் ஆகியவற்றுக்கு என, இந்த உத்தரவை கருதக் கூடாது.

மனு தொடர்பாக, சீனிவாச சேதுபதி உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும். விசாரணை, ஜூன் 19ம் தேதி தள்ளிவைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க., வழக்கு

சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு போன்ற நடைமுறைகளில் பங்கேற்க விதித்த இடைக்கால தடையை எதிர்த்து, த.வெ.க., - எம்.எல்.ஏ., சீனிவாச சேதுபதி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என, மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில், நேற்று பிற்பகல் அவசரமாக முறையீடு செய்தார். இதை ஏற்ற தலைமை நீதிபதி, இந்த வழக்கை, இன்று விசாரிப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், தி.மு.க., தரப்பிலிருந்து பெரியகருப்பன், 'கேவியட்' மனு தாக்கல் செய்துள்ளார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us