பா.ஜ., கட்சியினர் 'ரோடு ஷோ' நடத்துவதில் சிக்கல்: பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுப்பு
பா.ஜ., கட்சியினர் 'ரோடு ஷோ' நடத்துவதில் சிக்கல்: பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுப்பு
UPDATED : ஏப் 06, 2024 07:45 PM
ADDED : ஏப் 06, 2024 12:13 PM

திருச்சியில், பா.ஜ., கட்சி சார்பில், ரோடு ஷோ நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். தேசிய தலைவர் பங்கேற்கும் 'ரோடு ஷோ'வுக்கு, எப்படியும் அனுமதி பெற்று விட வேண்டும், என்ற முயற்சியில், பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள் இறங்கியுள்ளனர்.
திருச்சியில், நாளை (ஏப். 7 ம் தேதி) பா.ஜ., கட்சியின் தேசிய தலைவர் நட்டா பங்கேற்கும் 'ரோடு ஷோ' நடத்த, திருச்சி மாவட்ட பா.ஜ., கட்சியினர் அனுமதி கேட்டிருந்தனர்.
காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை, 'ரோடு ஷோ' நடத்த, ஆன்லைன் வாயிலாக அனுமதி கேட்டிருந்த நிலையில், பாது காப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை காரணம் காட்டி, இன்று, போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப் பட்டது.
இருப்பினும், தேசிய தலைவர் பங்கேற்கும் 'ரோடு ஷோ'வுக்கு, எப்படியும் அனுமதி பெற்று விட வேண்டும், என்ற முனைப்பில், பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜசேகரன் கூறியதாவது:
திருச்சியில், பா.ஜ., கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்கும், 'ரோடு ஷோ'வுக்கு, திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாலை தவவளன் அனுமதி மறுத்து விட்டார்.
தி.மு.க., உள்ளிட்ட கட்சியினரும், அமைச்சர்களும் ஓட்டு கேட்கும் போது, பா.ஜ., தேசியத் தலைவர் மட்டும் ஓட்டு கேட்கக் கூடாதா? திருச்சியை சேர்ந்த இரண்டு அமைச்சர்களும், எங்களை நசுக்கப் பார்க்கின்றனர். அதிகாரிகள் அனுமதி மறுத்தாலும், திட்டமிட்டபடி 'ரோடு ஷோ' நடக்கும். பா.ஜ.,கட்சியினர் மிகுந்த எழுச்சியோடு பங்கேற்பார்கள், என்று தெரிவித்தார்.

