வெள்ளை காகிதத்தை காட்டிய டிஆர்பி ராஜா: கொந்தளித்த இபிஎஸ்
வெள்ளை காகிதத்தை காட்டிய டிஆர்பி ராஜா: கொந்தளித்த இபிஎஸ்
ADDED : செப் 25, 2025 08:45 PM

வேடசந்தூர் : '' முதலீடு குறித்து வெள்ளி அறிக்கை கேட்டால் அமைச்சர் டிஆர்பி ராஜா வெள்ளை காகிதத்தை காட்டுகிறார். திமுக ஆட்சி வெற்று விளம்பர ஆட்சி என்பதை வெள்ளை காகிதத்தை காட்டி அவர் நிரூபித்துவிட்டார்,'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தில் வேடசந்தூரில் இபிஎஸ் பேசியதாவது: திமுக ஆட்சியில் அரசு பள்ளியில் சேரும் மாணவர்கள் சேர்க்கை குறைந்துவிட்டது, அரசுப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. யாரும் திமுக ஆட்சியில் நியமிக்கப்படவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1.5 லட்சம் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால்1.5 லட்சம் ஆசிரியர்கள் மன உளைச்சலில் உள்ளனர். அவர்களுக்கு அரசு என்ன செய்யப்போகிறது என்று சொல்லவில்லை.
தொழில் துறை அமைச்சர், ஒரு வெள்ளை காகிதத்தைக் காட்டி இதுதான் வெள்ளை அறிக்கை என்கிறார். எவ்வளவு ஏத்தம் இருந்தால் இப்படிப் பேசுவார்..? நாட்டில் பல லட்சம் பேர் வேலையில்லாமல் சிரமப்படுகிறார்கள். இந்த 52 மாத ஆட்சியில் 922 ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும், 10.5 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், 32 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் 75% ஒப்பந்தங்கள் முடிந்துவிட்டதாகவும் ஸ்டாலின் சொன்னார். இதற்கு முதல்வர் ஸ்டாலினும், டி.ஆர்.பி.ராஜாவும் தான் விளக்கம் கொடுக்க வேண்டும். 922 ஒப்பந்தங்கள் போடப்பட்டது என்று சொன்னால், அதில் 75% நிறைவேற்றப்பட்டது என்று சொன்னால் சுமார் 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். இத்தொகுதியில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது?
10.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்ததாகச் சொன்னதற்கு வெள்ளை அறிக்கை கேட்டேன். தொழிலின் நிலை என்ன? எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது என்று விளக்கம் கேட்டால்,டிஆர்பி ராஜா வெள்ளை காகிதத்தை காட்டுகிறார். உங்களுடைய ஆட்சி வெற்று விளம்பர ஆட்சி என்பதை வெள்ளை காகிதத்தைக் காட்டி நிரூபித்துவிட்டீர்கள். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். அங்கு ஒன்றுமே இல்லை. எனவே வெள்ளை காகிதத்தைத் தான் காட்டியாக வேண்டும். இந்த ஆட்சியில் அத்தனையும் பொய், பொய் தவிர்த்து வேறு ஒன்றுமேயில்லை. இவ்வாறு இபிஎஸ் பேசினார்.