அதிகரித்து வரும் காசநோய் பாதிப்பு; 2025க்குள் கட்டுப்படுத்துவது சிரமம்
அதிகரித்து வரும் காசநோய் பாதிப்பு; 2025க்குள் கட்டுப்படுத்துவது சிரமம்
ADDED : ஏப் 16, 2025 06:31 AM

சென்னை : 'தமிழகத்தில், காசநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட, 2025ம் ஆண்டுக்குள், அதை கட்டுப்படுத்துவது சிரமம்' என, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காசநோயை முழுமையாக ஒழிக்க, மத்திய, மாநில அரசுகள், பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. இந்தியாவில், 2030ம் ஆண்டுக்குள், காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தமிழகத்தில், 2025ம் ஆண்டுக்குள், காசநோயை கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதிகாரிகள் செயலாற்றி வந்தனர்.
காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்; நோய் பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிதல்; தொற்று ஏற்படாமல் தடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் பயனாக, காசநோயால் பாதிக்கப்படுவோரில், 84 சதவீதம் பேர், முதல் சிகிச்சையிலேயே குணமடைந்து விடுகின்றனர். மீதமுள்ள, 16 சதவீதம் பேர் தொடர் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில், 5.8 சதவீதம் பேர் உயிரிழப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், காசநோய் பாதிப்பு தொடர்ந்து வருவதால், நிர்ணயித்தபடி இந்த ஆண்டுக்குள் அதை கட்டுப்படுத்துவது சிரமம் என, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது: காசநோயால் ஆண்டுக்கு, 80,000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை விட, தமிழகத்தில் பாதிப்பு குறைவு. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்குள், காசநோயை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களிலேயே, 25,000க்கும் மேற்பட்ட காசநோயாளிகள் கண்டறியப்பட்டு உள்ளனர். பாதிக்கப்படும் நோயாளிகளை கண்டறிவதன் வாயிலாக, மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.
எனவே தான், ஒவ்வொரு பகுதியாக சென்று, பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஒரு சில ஆண்டுகளில், காசநோயை கட்டுப்படுத்திய மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.