ADDED : ஜன 11, 2025 04:03 AM
சென்னை: த.வெ.க., கட்சி துவங்கி ஓராண்டு நெருங்கும் நிலையில், மாவட்டச் செயலர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கடந்த ஆண்டு பிப்., 2ம் தேதி, த.வெ.க., துவங்கப்பட்டது. அக்கட்சிக்கு மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் மட்டும் உள்ளனர். பல மாவட்டங்களில், மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர்.
அதேபோல் மாநில நிர்வாகத்திலும், பல்வேறு பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. மாற்று கட்சிகளிலிருந்து த.வெ.க.,வில் இணைய விரும்புவோருக்கும் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. விஜய் மக்கள் இயக்கத்தில் பணியாற்றியோருக்கும், பணம் படைத்தோருக்கும்இடையே, மாவட்டச் செயலர் பதவியை கைப்பற்றுவதில் போட்டி உருவாகியுள்ளது.
இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலர் என்ற அடிப்படையில், 100 முதல் 120 பேர் வரை நியமிக்கப்பட உள்ளனர்.
அதுபற்றி ஆலோசிப்பதற்கான கூட்டம் நேற்று நடந்தது. மாநில பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட தலைவர்கள், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அக்கூட்டத்தில் விஜய் பங்கேற்கவில்லை. மாவட்டச் செயலர் பதவிக்கு தகுதியானவர்கள் யார் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர், மாவட்டச் செயலர் பதவிக்கு பரிசீலிக்கப்படாதவர்களை தனியாக அழைத்து, புஸ்ஸி ஆன்ந்த் சமாதானம் செய்துள்ளார்.