அறிமுகமான ஒரே நாளில் ஆரம்பமானது அக்கப்போர்; த.வெ.க., கொடிக்கு எதிராக போலீசில் புகார்!
அறிமுகமான ஒரே நாளில் ஆரம்பமானது அக்கப்போர்; த.வெ.க., கொடிக்கு எதிராக போலீசில் புகார்!
ADDED : ஆக 23, 2024 12:49 PM

சென்னை: நடிகர் விஜய், தன் கட்சிக் கொடியை அறிமுகம் செய்த ஒரே நாளில், அடுத்தடுத்து அக்கப்போராக வந்து கொண்டிருக்கிறது. இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
நேற்யை தினம் தமிழகம் முழுவதும் உள்ள நடிகர் விஜய் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட கொண்டாட்டம். அரசியலில் இறங்கப் போவது உறுதி நடிகர் விஜய் அறிவித்து, சொன்னபடி கட்சிக்கான கொடியை அறிமுகப்படுத்தியதே காரணம்.
கட்சிக் கொடிக்காக கடந்த சில நாட்களுக்கு முன்னரே ரிகர்சல் செய்து தயாரானார் நடிகர் விஜய். அப்போது பறந்த மஞ்சள் வண்ணக்கொடியைத் தான் கட்சிக்கான கொடி என்று ரசிகர்கள் எண்ணிக்கொண்டு இருக்க, டுவிஸ்ட்டாக, மஞ்சள், அடர்சிவப்பு நிறத்தில் கொடியை அறிமுகப்படுத்தி தமிழக அரசியல் களத்தை அதகளப்படுத்தினார்.
கட்சிக்கொடி அறிமுகம், நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து, தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., உள்ளிட்ட பல கட்சிகள் தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளன.
அதிலும் குறிப்பாக, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் குசம்பான ரியாக்ஷன் வேற லெவலில் உள்ளது.வேலூரில் செய்தியாளர்கள் நடிகர் விஜய் தனது கட்சிக் கொடி அறிமுகப்படுத்தி இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்று அவரிடம் கேள்வியாக முன் வைத்தனர். அதைக் கேட்ட அவரும், பறக்கும் போது பார்ப்பேன் என்று கூறி கலகலக்க வைத்தார்.
கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தி 24 மணி நேரம் கூட ஆகவில்லை... அதில் உள்ள யானை சின்னத்தை கண்டு, பகுஜன் சமாஜ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தை நாடி இருக்கிறது.
சமூக ஆர்வலர் ஒருவரும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து பரபரப்பைக் கூட்டி இருக்கிறார். இல்லை... அது ஸ்பெயின் நாட்டுக் கொடி, காப்பி அடித்துள்ளார் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் ரவுண்டு கட்டி விமர்சித்தும் வருகின்றனர்.
இதுபோதாது என்று, விடுதலைப்புலிகள் இயக்கத்தால் தமிழீழத்தின் தேசிய மரமாக அறிவிக்கப்பட்ட வாகை பூவை பயன்படுத்தி இருப்பதாக ஒரு புது குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.
அது வாகை மலர் அல்ல, தூங்குமூஞ்சி மரத்தின் பூ என்று நெட்டிசன்கள் காமெடி கிளப்பி வருகின்றனர். இப்படி கட்சிக் கொடி அறிமுகப்படுத்திய 24 மணி நேரத்துக்குள் குபீர், குபீர் என்று சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது நடிகர் விஜய் தரப்புக்கும், ரசிகர்கள் தரப்புக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்திருப்பதாக தெரிகிறது.
இப்படிப்பட்ட சூழலில், கட்சிக் கொடி விவகாரத்தில் அடுத்த என்ன செய்யலாம் என தமிழக வெற்றிக் கழகம் புதிய முடிவு எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி யானை சின்னம் குறித்து, தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டால் பதில் அளித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஒரு நாள் கூட ஆகவில்லை, அதற்குள் கொடி மீதான விமர்சனத்தை நடிகர் விஜய் தரப்பு ரசிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
எது எப்படி இருந்தாலும், அனைத்தையும் அவர் எதிர்கொள்வார் என்று நம்பிக்கை வரிகளை கூறி வருகின்றனர் நடிகர் விஜய் ரசிகர்கள்...!