த.வெ.க., மாநாட்டு திடலுக்கு திடீர் விசிட் அடித்த விஜய்; ஏற்பாடுகள் குறித்து 2 மணிநேரம் ஆய்வு
த.வெ.க., மாநாட்டு திடலுக்கு திடீர் விசிட் அடித்த விஜய்; ஏற்பாடுகள் குறித்து 2 மணிநேரம் ஆய்வு
UPDATED : அக் 27, 2024 06:43 AM
ADDED : அக் 26, 2024 10:30 PM

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் நாளை(அக்.,27) த.வெ.க., மாநாடு நடைபெறும் திடலை அக்கட்சியின் தலைவர் விஜய் நேரில் ஆய்வு செய்தார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை நடத்துகிறார். ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. கட்சியின் கொள்கை, இலக்குகளை முன் வைக்கும் திருவிழாவாக இம்மாநாடு இருக்க வேண்டும் என்று விஜய் ஏற்கனவே கூறி இருக்கிறார். ஆனால், மாநாட்டு திடலில் வைக்கப்பட்டுள்ள காமராஜர், பெரியார், அம்பேத்கார் உள்ளிட்டோரின் கட்அவுட்டுகளே அவரது கொள்கை என்ன என்பதை எடுத்துக் காட்டி விட்டது.
அதேபோல, மாநாட்டிற்கு மதுபாட்டில்கள், செல்பி ஸ்டிக்குகள் , கேமராக்கள் என 18 வகையான பொருட்களை எடுத்து வர தொண்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், மாநாட்டுக்கு வருபவர்களுக்கு வழங்குவதற்கு நொறுக்கு தீனிகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது. நாளை மாநாடு நடைபெற உள்ள நிலையில், பெரும்பாலான தொண்டர்கள், ரசிகர்கள் இன்றே அங்கு குவிந்து வருகின்றனர். நிறைய கேரவன்களும் நிறுத்தப்பட்டிருப்பதால், இந்த மாநாட்டுக்கு சினிமா பிரபலங்களும் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய தினம் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் மாநாட்டுக்கு த.வெ.க., தொண்டர்களும், ரசிகர்களும் வருவார்கள் என்பதால், விக்கிரவாண்டியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி நோக்கி செல்லும் அரசுப் பேருந்துகள், கனரக வாகனங்கள், கார்கள், திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாகவும், வில்லியனூர் வழியாகவும், மயிலம், பெரும்பாக்கம் வழியாகவும் விழுப்புரம் செல்லலாம். திருச்சியில் இருந்து சென்னை வரும் பேருந்துகள், கனரக வாகனங்கள், கார்கள், செஞ்சி, திண்டிவனம் வழியாகவும், வில்லியனூர், திண்டிவனம் வழியாகவும் சென்னை செல்லலாம்.
மாநாட்டுக்கு எத்தனை பேர் வந்துள்ளார்கள் என்பது குறித்து அறிவதற்காக, தொண்டர்கள் தங்களின் வருகையை பதிவு செய்ய QR CODE ஸ்கேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மாநாட்டுக்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், மாநாட்டு திடலுக்கு விஜய் சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார். ஏற்பாடுகளை சுமார் 2 மணிநேரம் ஆய்வு செய்த அவர், பிறகு பொதுச்செயலாளர் ஆனந்துடன், நாளை நடக்கும் மாநாட்டின் திட்டங்கள் குறித்தும் ஆலோசித்துள்ளார்.