த.வெ.க., கூட்டணியில் அ.ம.மு.க., இணைவது உறுதி; செங்கோட்டையன் திட்டவட்டம்
த.வெ.க., கூட்டணியில் அ.ம.மு.க., இணைவது உறுதி; செங்கோட்டையன் திட்டவட்டம்
ADDED : ஜன 04, 2026 07:54 PM

கோவை: “இரு கட்சிகளும் வேண்டாம், புதிய முகம் வேண்டும் என்பது இளைஞர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது,” என, த.வெ.க., நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவையில் அவர் அளித்த பேட்டி:
ஒன்றரை மாதத்துக்கு முன், துணை முதல்வர் உதயநிதி கூறுகையில், 'அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமியே இருந்தால், தேர்தலில் எங்கள் பணி சுலபம்' என்றார். அப்படி என்றால், இருவரும் ஒன்றாக இருக்கின்றனர் என்பது தான் அர்த்தம். அரசு ஊழியர்களுக்காக தி.மு.க., அரசு வெளியிட்டிருப்பது தேர்தல் அறிவிப்பு.
த.வெ.க.,வை பொறுத்தவரை, தெளிவாக, நிலையாக, நாளைய எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறோம். இரு கட்சிகளும் வேண்டாம் புதிய முகம் வேண்டும் என்பது இளைஞர்கள், இளம்பெண்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் விஜய்க்கு ஓட்டு போடுமாறு, பெற்றோரிடம் குழந்தைகள் கூறுகின்றனர்.
பொங்கலுக்குள், அ.தி.மு.க.,வில் இருந்து எத்தனை பேர், த.வெ.க.,வுக்கு வருகின்றனர் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் சேருவர், அதாவது, த.வெ.க., கூட்டணியில் இடம் பெறுவர்.
உலக வரலாற்றில், மலேஷியாவில் நடந்த விஜயின் ஜனநாயகன் பட விழா புதிய இடம் பிடித்துள்ளது. மலேஷிய மண்ணில் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில், ரோடு ஷோ நடந்தது. த.வெ.க., தலைவர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம், மக்கள் வியக்கும் அளவுக்கு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

