பெஞ்சல் வந்தது... ஆனால் விஜய் வரலையே! சைலண்ட் மோடில் த.வெ.க!
பெஞ்சல் வந்தது... ஆனால் விஜய் வரலையே! சைலண்ட் மோடில் த.வெ.க!
UPDATED : டிச 01, 2024 10:29 PM
ADDED : டிச 01, 2024 05:01 PM

சென்னை: பெஞ்சல் புயல் தமிழகம், புதுச்சேரியை புரட்டி எடுத்து உள்ள நிலையில் 2026ல் ஆட்சி என்ற முழக்கத்துடன் த.வெ.க., என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலுக்கு வந்த நடிகர் விஜயும், கட்சியினரும் எங்கே உள்ளனர் என்றே தெரியாத நிலை உள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கிய நடிகர் விஜய், 2026ல் தமது கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி அறிவித்து பரபரப்பை கிளப்பினார். அவரது அறிவிப்பால் உள்ளம் மகிழ்ந்த த.வெ.க., தொண்டர்கள், ரசிகர்கள் 2026ல் த.வெ.க., ஆட்சி தான் என்ற உற்சாகத்தில் நடக்கின்றனர்.
அதற்கேற்ப தமிழகம் முழுவதும் அண்மையில் நடந்த வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாமில் த.வெ.க.,வினர் மும்முரம் காட்டினர். த.வெ.க.,வின் இந்த செயல்பாடு மற்ற கட்சிகளை உற்று பார்க்க வைத்தது.
ஆரம்ப கட்டத்தில் அட்டகாசமாக களம் இறங்கிய கட்சியின் முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் இப்போது பெஞ்சல் புயல் பாதிப்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சிக்கி உள்ள தருணத்தில் எங்கே என்று கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுவதாவது; பெஞ்சல் புயல், மழை நேரத்தில் தமிழக அரசின் மீட்பு நடவடிக்கைகள், செயல்பாடுகள் பற்றி சுட்டிக்காட்டுக் கொண்டே மக்களுடன் களத்தில் அ.தி.மு.க., இருக்கிறது.
தமிழக அரசின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வரும் எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., அறிக்கைகள் விட்டும், தொண்டர்களை உதவும் படியும் அறிவுறுத்தி இருக்கிறார். மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் அ.தி.மு.க., தொண்டர்கள் சென்று உதவ வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
அ.தி.மு.க., போன்று பா.ஜ.,வும் மக்களை காக்கவும், அவர்களுக்கு கைகொடுக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. கட்சியின் தமிழக அலுவலகத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் அவசர உதவிகளுக்கு உதவி மையம் அமைத்தும் களத்தில் உதவி வருகிறது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அரசின் செயல்பாடுகளை அன்றாடம் விமர்சித்து அரசியல் களமாடி வருகிறார்.
ஆனால் 2026ல் தமது தலைமையிலான த.வெ.க.,வுடன் கூட்டணி ஆட்சி என்று முழக்கமிட்ட நடிகர் விஜய் தரப்பில் இதுவரை மக்களுக்கு உதவியதாக அல்லது உதவி செய்யுங்கள் என்று தொண்டர்களுக்கு வழிகாட்டும் வகையில் ஒரு அறிக்கையும் வெளியாகவில்லை என்ற கருத்து எழுந்துள்ளது.
இத்தனைக்கும் த.வெ.க., பொதுச் செயலாளர் ஆனந்தின் சொந்த மாநிலமான புதுச்சேரியில் வரலாறு காணாத அளவில் 47 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. மழையிலும், வெள்ளத்திலும் அங்குள்ள மக்கள் தத்தளித்து வரும் நிலையில் ஏதேனும் மக்கள் நலப்பணிகள் த.வெ.க., சார்பில் முன் எடுக்கப்படவில்லை.
ஒரு அரசியல் தலைவராக பாதிக்கப்பட்ட மக்களை நேரிடையாக சென்று நடிகர் விஜய் சந்திக்க முடியாது. ஆனால் தமது கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மூலம் மக்களை சந்திக்க முடியும், அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முடியும். ஆனால் அப்படியான எந்த ஒரு அசைவும் த.வெ.க., தளத்தில் இருப்பதாக அறிய முடியவில்லை. அரசின் செயல்பாடுகளை சட்டிக்காட்டும் வகையில் குறைந்த பட்சம் ஒரு அறிக்கை கூட வெளியாகவில்லை.
மக்களுடன் நின்று, 2026க்கான அரசியல் களத்தில் ஸ்கோர் செய்யும் வாய்ப்பை பயன்படுத்தாமல் இருக்கிறார் நடிகர் விஜய். மக்கள் பணிக்கான சாதகமான சூழல் இருந்தும், அதை முன்னெடுக்காமல் இருப்பது ஏன் என்று தொண்டர்கள் தரப்பிலும் குமுறல்கள் எழுந்துள்ளன.
மக்கள் பாதிக்கப்படும் தருணத்தில் அவர்களுடன் கை கோர்த்து நின்றால் மட்டுமே அவர்களின் அன்பை பெறமுடியும், எதிர்கால அரசியலில் நினைத்த அறுவடையை செய்ய முடியும். ஆனால் அதுபோன்றதொரு முகாந்திரம் இதுவரை வெளிப்பட வில்லை என்கின்றனர் தொண்டர்கள். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.