ADDED : மார் 29, 2025 02:41 AM

திருச்சி : திருச்சியில், டி.வி.எஸ்., டோல்கேட் என்ற பஸ் ஸ்டாப் பெயரை, கலைஞர் கருணாநிதி டோல்கேட் என மாற்ற, மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
திருச்சி மாநகராட்சி பட்ஜெட் விவாதக் கூட்டம், தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் அன்பழகன் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், ஜமால் முகமது கல்லுாரி அருகில் உள்ள டி.வி.எஸ்., டோல்கேட் என்ற பஸ் ஸ்டாப் பெயரை, கலைஞர் பஸ் ஸ்டாப் என்று பெயர் மாற்றம் செய்ய, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அ.தி.மு.க., கவுன்சிலர் அம்பிகாபதி கூறுகையில், ''புதிதாக துவக்கப்படும் இடங்களுக்கு யார் பெயரை வேண்டுமானாலும் வைக்கட்டும்.
''அதில் ஆட்சேபனை இல்லை. ஏற்கனவே டி.வி.எஸ்., டோல்கேட் என பல ஆண்டுகளாக இருந்த பஸ் ஸ்டாப் பெயரை மாற்றுவது சரியல்ல. இது ஜனநாயக போக்கு அல்ல. அதனால் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தோம்,'' என்றார்.