ADDED : டிச 09, 2025 03:42 AM

கோவை: நகை பட்டறையை உடைத்து, ஒரு கிலோ தங்கத்தை கொள்ளையடித்த இருவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவை, வடவள்ளியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்; கோவை, சாமி அய்யர் வீதியில் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையை உடைத்து, மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த, 1 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
வெரைட்டிஹால் ரோடு போலீசார் விசாரித்தனர். கொள்ளையர்களை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அப்பகுதி கண் காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், இருவர் நகைகளை பெட்டியுடன் துாக்கிச் சென்றது தெரிந்தது.
இதையடுத்து, கணுவாய் பகுதியில் மறைந்திருந்த கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள், கோவை கணுவாயை சேர்ந்த முருகன், 45, அவரது மைத்துனர் துாத்துக்குடியை சேர்ந்த சின்னதுரை, 32, என, தெரிந்தது. இருவரும் சாக்கடையில் இருந்து தங்க துகள்களை சேகரித்து, விற்பனை செய்தது தெரிந்தது.
முருகன், ஏற்கனவே ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் நகைப்பட்டறையை உடைத்து, 500 கிராம் நகைகளை திருடிய வழக்கில் சிக்கியவர்.
சின்னதுரை மீது துாத்துக்குடியில் மூன்று வழக்குகள் உள்ளன. போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

