ADDED : ஜூன் 09, 2026 05:58 AM
சென்னை: தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகத்தில், மரபுசாரா மின்சார பிரிவு செயல்படுகிறது. இது, சென்னை அண்ணா சாலையில் உள்ள, தலைமை அலுவலகத்தில் உள்ளது. மேலும், திருப்பூர், உடுமலைப்பேட்டையில், மேற்பார்வை பொறியாளர் அலுவலகமும் உள்ளது.
அங்கு, சூரியசக்தி, காற்றாலை மின் நிலையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. உடுமலைப்பேட்டை மரபுசாரா பிரிவு அலுவலகத்தில் பணிபுரிந்த பொறியாளர்கள், மின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க பணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து, மே, 27ம் தேதி நம் நாளிதழின், 'டீ கடை பெஞ்ச்' பகுதியில் செய்தி வெளியானது.
அதைத் தொடர்ந்து, புகார்கள் குறித்து, மின்வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, முறைகேடில் ஈடுபட்ட, உடுமலைப்பேட்டை அலுவலகத்தின் மேற்பார்வை பொறியாளர் பிரசாத், செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்து, மின் வாரியம் நேற்று உத்தரவிட்டது.
