இரட்டை இலைச் சின்னம்: இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.,க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
இரட்டை இலைச் சின்னம்: இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.,க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
ADDED : டிச 10, 2024 07:57 PM

சென்னை: இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக பதில் அளிக்கும்படி, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர், சென்னை ஐகோர்ட்டில், ' அ.தி.மு.க.,வில் உட்கட்சி பிரச்னை இருப்பதால் இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக முடிவெடுக்கக்கூடாது. அ.தி.மு.க.,வின் உட்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அக்கட்சிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது' எனக்குறிப்பிட்டு இருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 'இந்த விண்ணப்பத்தின் மீது அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் நான்கு வாரத்திற்குள் கேட்டு முடிவெடுக்க வேண்டும்' என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கைத் தொடர்ந்த சூரியமூர்த்தி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ள தேர்தல் ஆணையம் 19ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கும்படியும், 23ம் தேதி தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்களுக்கு உத்தரவிட்டு உள்ளது.