இரட்டை இலை சின்ன வழக்கு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு
இரட்டை இலை சின்ன வழக்கு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு
ADDED : டிச 17, 2024 07:36 PM
புதுடில்லி:இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் புகழேந்தி அளித்துள்ள மனு மீது விசாரணை நடத்தி, விரைந்து தீர்வு காண வேண்டும்' என, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு' என்ற பெயரில், ஒரு குழுவை ஏற்படுத்தியவர்களோடு இணைந்து செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த மார்ச்சில் டில்லி உயர் நீதிமன்றத்தில் புகழேந்தி ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 'அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது, அவருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்தது ஆகியவற்றிற்கு எதிராக தலைமை தேர்தல் ஆணையத்தில் எங்கள் தரப்பில் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்தும் தொடர்ந்து நிலுவையிலே வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், புகழேந்தியின் மனுவை விரைந்து விசாரித்து முடிக்க தேர்தல் ஆணையத்திற்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை எனக்கூறி, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு எதிராக புகழேந்தி தொடர்ந்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, டில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி மனோஜ் ஜெயின் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதி, 'பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக, புகழேந்தி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை விரைந்து தீர்வு காண வேண்டும்,'' என, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
கோர்ட் இரண்டாவது முறையாக புகழேந்தியின் மனு மீது விரைந்து விசாரித்து தீர்வு காணச் சொல்லி, தேர்தல் ஆணையத்துக்கு கோர்ட் உத்தரவிட்டிருப்பதால், மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்டிருக்கிறது.