பட்டாவுக்கும் லஞ்சம்; நில அளவைக்கும் லஞ்சம்: திருச்சியில் இருவர் கைது!
பட்டாவுக்கும் லஞ்சம்; நில அளவைக்கும் லஞ்சம்: திருச்சியில் இருவர் கைது!
ADDED : ஜூலை 11, 2025 07:33 PM

திருச்சி: திருச்சியில் தனி பட்டா வழங்க ரூ.13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவை உதவியாளர் மற்றும் பட்டா வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி விமான நிலையம், வள்ளுவர் நகரை சேர்ந்தவர் பஷீர் அகமது. இவரது மனைவி ராபியா. கொட்டப்பட்டு பகுதியில் வாங்கிய வீட்டுமனை வாங்கி ய அவர் அதனை கணவர் பெயரில் சாத்தனூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். அதற்கு தனி பட்டா வேண்டி நில அளவை உதவி ஆய்வாளர் தையல்நாயகியை அணுகினார். தனிப்பட்டா வழங்க ரூ. 13 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என தையல்நாயகி கேட்டுள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத ராபியா, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, ராபியாவிடம் இருந்து ரூ.13 ஆயிரம் லஞ்சப் பணத்தை வாங்கிய தையல்நாயகியை அவரது அலுவலகத்தில் டி.எஸ்.பி., மணிகண்டன் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா பொன்னுசங்கம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். அவருக்கு சொந்தமான 31 சென்ட் புன்செய் நிலத்தை அளந்து கொடுத்து பட்டா வாங்க நில அளவையாளர் ராஜாவை அணுகினார். இதற்கு ராஜா, 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். அதனை கொடுக்க விரும்பாத முருகேசன், லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் அளித்தார். இதன்படி, முருகேசனிடம் இருந்து ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ராஜாவை போலீசார் கைது செய்தனர்.