ADDED : அக் 14, 2024 12:27 AM
கும்மிடிப்பூண்டி: மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி இருவர் இறந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில், சூர்யதேவ் என்ற பெயரில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மிதுன் மண்டல், 31, தெபசியா புய்னா, 25, என்ற இருவர், ஒப்பந்த அடிப்படையில் கட்டுமான வேலை பார்த்து வந்தனர்.
நேற்று மதியம் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர்கள் வேலை பார்த்த இரும்பு சாரத்தில் மின்கசிவு ஏற்பட்டதால், மின்சாரம் பாய்ந்தாகக் கூறப்படுகிறது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.