இரண்டு வயது பெண் குழந்தை கழுத்து அறுத்து படுகொலை: வாலிபர் வெறிச்செயல்
இரண்டு வயது பெண் குழந்தை கழுத்து அறுத்து படுகொலை: வாலிபர் வெறிச்செயல்
UPDATED : மே 23, 2025 06:20 AM
ADDED : மே 23, 2025 03:08 AM

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரத்தில் இரண்டு வயது பெண் குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
எமனேஸ்வரம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் தேசிங்கு 33. இவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் வக்கீலாக உள்ளார். இவரது மனைவி டெய்சி. இவர்களது பெண் குழந்தை லெமோரியாவுக்கு 2 வயது 2 மாதங்கள் ஆகிறது. இவர்களது உறவினர் வடிவேல் மகன் சஞ்சய் 24, அப்பகுதியில் வசிக்கிறார்.
நேற்று மாலை 4:30 மணிக்கு குழந்தை லெமோரியாவை சஞ்சய் அப்பகுதியிலுள்ள ஒரு வீட்டின் பின்புறம் நகராட்சி கட்டணக்கழிப்பறை கட்டப்படும் இடத்திற்கு அழைத்து சென்றார். அங்குள்ள துணி துவைக்கும் கல்லில் குழந்தையை படுக்க வைத்து கத்தியால் கழுத்தை அறுத்து தலையை துண்டித்தார். அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்ட நிலையில் உடலை மட்டும் விட்டு விட்டு தலையை அருகில் உள்ள கிறிஸ்தவ ஊருணியில் கத்தியுடன் வீசினார்.
எமனேஸ்வரம் போலீசார் விரைந்து சஞ்சையை கைது செய்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் மற்றும் வீரர்கள் குழந்தையின் தலை மற்றும் கத்தியை ஊருணியிலிருந்து மீட்டனர்.
போலீசார் கூறியதாவது: சஞ்சய் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளன. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அப்பகுதியினர் கூறுகின்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது என்றனர்.