ADDED : ஜன 14, 2025 11:34 PM

மதுரை; ''பழனிசாமி 3 மணி நேரம் சட்டசபையில் பேசிய வீடியோ பதிவை வெளியிட தயாரா'' என முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் சவால் விட்டார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: சட்டசபையில் அண்ணா பல்கலை மாணவி கூறிய 'யார் அந்த சார்' என்ற அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கேள்வி எழுப்பிய போது, அதற்கு கரகாட்டக்காரன் படத்தில் வரும் வாழைப்பழ காமெடி போலத்தான் முதல்வர் பதில் சொன்னார்.
சட்டசபையில் முதல்வரை கதற, கதற கேள்வி எழுப்பியதால் 'டங்ஸ்டன் வராது. அப்படி வந்தால் நான் பதவியை கூட ராஜினாமா செய்வேன்' என்று ஸ்டாலின் கூறினார்.
'யார் அந்த சார்' என்பதை கண்டுபிடிக்கும் வரை பட்டிதொட்டி வரை அ.தி.மு.க., போராடும். தி.மு.க., அரசிடம் விடை கிடைக்கவில்லை என்றால், பழனிசாமி ஆட்சி அமைக்கும்போது அதற்கு விடை கிடைக்கும்.
சட்டசபையில் 3 மணி நேரம் பழனிசாமி பேசினார். கருப்பு சட்டை அணிந்து வந்ததை ஏன் ஒளிபரப்பவில்லை. கவர்னர் உள்ளே வந்ததையும் ஏன் காட்டவில்லை என்று கடுமையாக கேள்வி எழுப்பினார்.
பழனிசாமி 3 மணி நேரம் பேசிய வீடியோவை கேட்டு நாங்கள் கடிதம் எழுதினோம். ஆனால் 45 நிமிடம் வீடியோவை அனுப்பினார்கள். அதில் 43 நிமிடம் ஸ்டாலின் பேசியது. 2 நிமிடம் மட்டும் தான் பழனிசாமி பேசியதுஇருந்தது.
நான் சவால் விடுகிறேன். பழனிசாமி பேசிய 3 மணி நேரம் வீடியோ பதிவை வெளியிட தயாரா.
இவ்வாறு கூறினார்.