'ஹிந்துக்களை திட்டுவதற்கு பயப்படும் உதயநிதி': எச். ராஜா விமர்சனம்
'ஹிந்துக்களை திட்டுவதற்கு பயப்படும் உதயநிதி': எச். ராஜா விமர்சனம்
ADDED : ஜன 25, 2024 05:18 AM

மதுரை: 'ஹிந்துக்களை திட்டினால் ஓட்டுகள் குறையும் எனக்கருதுவதால், நாங்கள் ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்று உதயநிதி கூறுவதாக'' பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கூறினார்.
மதுரையில் அவர் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியை பார்க்கவும், சிறப்பு பூஜை நடத்தவும் ஒடிசா, கர்நாடகா மாநிலங்களில் அரசே ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் தமிழகத்தில் ராவண பக்தர்கள்' இதற்கு தடை ஏற்படுத்துகின்றனர். 2 நாட்களுக்கு முன்பே அரசு அறநிலையத்துறை, போலீஸ் மூலம் முட்டுக்கட்டை போட்டது எல்லோருக்கும் தெரியும்.
கோயிலில் மைக் வைத்து பேசும் கூட்டங்களுக்குத்தான் அனுமதி வேண்டும். பஜனை பாடி செல்ல அனுமதி தேவையில்லை என, அவர்கள் கன்னத்தில் கோர்ட் ஓங்கி அறைந்துள்ளது.அயோத்தி ராமர் கோயில் பிரச்னையால் தமிழகத்தில் தி.மு.க.,வுக்கு ஓட்டுகள் நிச்சயமாக குறையும்.
பா.ஜ., தமிழகத்தில் வளர்ந்து வருகிறது.இத்தேர்தலில் பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை அடுத்த 25 ஆண்டுகளுக்கானதாக இருக்கும். இந்திய பொருளாதாரம் 5 ஆண்டுகளில் முதலிடத்திற்கு வரும் வகையில் இருக்கும். ராமர் கோயில் பிரச்னையில் உதயநிதிக்கு சரித்திர அறிவோ, சட்ட அறிவோ கிடையாது.
ஹிந்துக்களை திட்டுவதால் பல மாநிலங்களில் 8 சதவீத ஓட்டுகள் குறைந்துள்ளன. அதனால் ஒருவித பயத்தில் நாங்கள் ராமருக்கு எதிரானவர்கள் இல்லை என்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.