உண்மையான சனாதனம் உதயநிதி துணை முதல்வரானது தான்; சீமான் விமர்சனம்
உண்மையான சனாதனம் உதயநிதி துணை முதல்வரானது தான்; சீமான் விமர்சனம்
UPDATED : அக் 03, 2024 02:07 PM
ADDED : அக் 03, 2024 12:41 PM

சென்னை: தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் மதுரை எய்ம்ஸூக்கு அடிக்கல் நாட்டியதாகவும், அதன் பிறகு 9 ஆண்டுகள் ஆட்சியிருந்தும் மருத்துவமனையை கட்டாதது ஏன் என்றும் தி.மு.க.,வுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
ம.பொ.சி.யின் 29ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது புகைப்படத்திற்கு மலர்தூவி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார்.
பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: தமிழக அமைச்சரவையில் நிகழ்ந்த மாற்றங்களை நான் ஏற்கவில்லை. முதல்வராக கருணாநிதி இருக்கும் போதும் சரி, இப்போது ஸ்டாலின் இருக்கும் போதும் சரி, தலித் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஆதி திராவிட நலத்துறையை தவிர்த்து வேறு எந்தத் துறையும் வழங்கப்படவில்லை. தலித் மக்களின் வாக்குகள் என் பக்கம் திரும்புகிறது என தெரிந்தவுடன், உயர்கல்வித்துறையை கொடுத்திருக்காங்க. அதுவும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் நடைபெற இருப்பதால், இப்ப இதை பண்ணியிருக்காங்க.
தலித் எம்.எல்.ஏ.,க்களுக்கு பிற துறையை கொடுப்பதாக இருந்திருந்தால், கருணாநிதி ஆட்சியில் கொடுத்திருக்க வேண்டும். அல்லது, நீங்க ஆட்சிப் பொறுப்புக்கு வந்த உடனே கொடுத்திருக்க வேண்டும். ராஜகண்ணப்பனுக்கு போக்குவரத்து, உயர்கல்வி மற்றும் பால்வளம் என அடுத்தடுத்து துறையை மாற்றுவதால், அந்தத் துறையை எப்படி செழுமையாக வைத்திருக்க முடியும்.ஓட்டுக்களை கவனத்தில் வைத்தே இதுபோன்று செய்வது என்ன மாதிரியான சமூக நீதி? 2026 சட்டசபை தேர்தலில் தலித் வேட்பாளர்களுக்கு, தி.மு.க., எத்தனை பொதுத் தொகுதிகளை கொடுக்கப் போகிறது என்பதை பார்க்கத் தான் போகிறோம்.
சமூக நீதி மற்றும் சனாதன எதிர்ப்பு என வாய்கிழிய பேசக் கூடாது. சனாதனமே உங்கள் வீட்டில் இருக்கிறது. அப்பறம் எப்படி நாட்டில் எதிர்ப்பீர்கள். கருணாநிதியின் மகன் என்பதை தவிர்த்து ஸ்டாலினை துணை முதல்வராக நியமிக்க என்ன தகுதி இருக்கிறது. அதேபோல, ஸ்டாலின் மகன் என்பதை தவிர்த்து உதயநிதிக்கு, துணை முதல்வராக என்ன தகுதி இருக்கிறது. இதுதான் உலகிலேயே கொடிய சனாதனம்.
கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்ற பிறப்பினாலேயே துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு கொடுத்திருப்பது தான் உண்மையான சனாதனம்.
போன முறை 39 எம்.பி.,க்களும், இந்த முறை 40 எம்.பி.,க்களையும் வைத்து என்ன செய்றீங்க. மதுரை எய்ம்ஸை கட்ட சொல்ல வேண்டியது தானா? இருந்த ஒரு செங்கல்லையும் எடுத்துட்டுப் போய்ட்டீங்க. இது என்ன பெரிய புரட்சியா?
இவ்வாறு சீமான் பேசினார்.