தகுதியுள்ள மகளிர் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை; உதயநிதி உத்தரவாதம்
தகுதியுள்ள மகளிர் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை; உதயநிதி உத்தரவாதம்
ADDED : ஜன 09, 2025 05:47 AM
சென்னை: ''மகளிர் உரிமைத் தொகை பெற, கடந்த முறை விண்ணப்பிக்க இயலாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கவும், திட்டத்தின் விதிகளை பூர்த்தி செய்யும் மகளிர் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கவும், மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்:
தி.மு.க., - காந்திராஜன்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் தொகுதியில், மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயன் பெறும் மகளிர் எண்ணிக்கையை, அரசு தெரிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் எத்தனை பேருக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. பல இடங்களில் மனு அளித்தும் பணம் வழங்கப்படாமல் உள்ளது. ஏற்கனவே மனு அளித்த, தகுதி உடைய அனைவருக்கும், அத்தொகை வழங்கப்படுமா?
துணை முதல்வர் உதயநிதி: வேடசந்துார் தொகுதியில் மட்டும், 62,000 மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர். மகளிர் உரிமை திட்டம் அறிவிக்கப்பட்டபோது, 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றை ஆய்வு செய்து, 70 சதவீத விண்ணப்பங்கள், அதாவது 1 கோடி 6 லட்சத்து 52,198 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
முதல் முறை விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள், மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்பட்டது. கூடுதலாக 9 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த டிச., மாதம் ஒரு கோடி 14 லட்சத்து 65,525 மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது விதிகளுக்கு உட்பட்டு, எவ்வளவு பேருக்கு கூடுதலாக வழங்க முடியுமோ, அவ்வளவு பேருக்கும், யாரும் விடுபடாமல், மகளிர் உரிமைத் தொகை வழங்க, நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - ஈஸ்வரன்: பயனாளிகள் எண்ணிக்கை உயர்த்தப்படுமா? விண்ணப்பம் கொடுக்கும் தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும், மகளிர் உரிமைத் தொகை கொடுக்க, துணை முதல்வர் ஆவன செய்வாரா?
துணை முதல்வர் உதயநிதி: என் தொகுதியிலும் கேட்கின்றனர். உறுப்பினரின் திருச்செங்கோடு தொகுதியில், 44,000 பேர் உரிமைத் தொகை பெறுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மக்கள் பிரதிநிதிகளிடம் பெண்கள் உரிமைத் தொகை பெற விண்ணப்பம் அளிக்கின்றனர். இந்த விபரங்களை, முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம்.
இதுவரை பயன் பெறாமல் உள்ளவர்களுக்கு, இத்திட்டத்தின் உதவிகள் கிடைக்க, தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.
கடந்த முறை விண்ணப்பிக்க இயலாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கவும், திட்டத்தின் விதிகளை பூர்த்தி செய்யும் மகளிர் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கவும், மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.