மொழி பிரச்னையை துாண்டும் உதயநிதி: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
மொழி பிரச்னையை துாண்டும் உதயநிதி: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
ADDED : நவ 04, 2024 05:43 AM

திருப்பூர்: 'முல்லைப்பெரியாறு பிரச்னையை தீர்க்க முடியாமல், மொழிப்பிரச்னையை துாண்டிவிடும் வகையில், துணை முதல்வர் உதயநிதி கேரளாவில் பேசியுள்ளார்' என்று ஹிந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
கேரளாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி, 'ஹிந்தி மொழியை எதிர்க்கவில்லை; ஹிந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்' என்றார்.
ஹிந்தி திணிப்புக்கு எதிராக கேரளாவும் துணைநிற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.கேரளாவில், ஏற்கனவே மும்மொழித் திட்டம் அமலில் உள்ளது. அங்கு சென்று மொழிப் பிரச்னையை துாண்டும் விதமாகப் பேசிஉள்ளார்.
துணை முதல்வராக இருப்பவர், அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். உதயநிதி நாலாந்தர அரசியல்வாதி போல நடந்து கொள்கிறார்.
கேரளா - தமிழகம் இடையே தீர்க்கப்படாத பல பிரச்னைகள் உள்ளன. தமிழகத்தின் நலன், உரிமை மற்றும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் முல்லைப்பெரியாறு அணை குறித்த பிரச்னை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது.
அங்கிருந்து மருத்துவக் கழிவுகளை இங்கு கொண்டு வந்து கொட்டுகின்றனர். அதற்கு,கேரள அரசை கண்டிக்க மனமில்லை.
முதல்வர் ஸ்டாலின் கேரளா சென்றபோதும் அரசியல் பேசினாரே தவிர, இரு மாநில வளர்ச்சி குறித்து பேசவில்லை.
ஹிந்தி திணிப்பை எதிர்ப்போம் என்ற உதயநிதி, ஹிந்தி மொழி பயில்வோர் உரிமையை பறிப்பது ஜனநாயக விரோதம் என்பதை உணர வேண்டும்.தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி மொழிப்பாடம் உள்ளது.
வசதியுள்ளோர் மட்டும் ஹிந்தி படிக்கட்டும் என எண்ணுகின்றனர். ஏழை மாணவர்கள் இதை பயிலக்கூடாது என்பதுதான் அவர்கள் எண்ணம்.
ஆளும் திறனற்ற இந்த அரசு ஜாதி, மொழி, இனம் என அரைத்த மாவையே மீண்டும் அரைத்து மூன்றாண்டு கால ஆட்சியை ஓட்டிவிட்டது.
தேச ஒற்றுமை மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு ஏதேனும் சிந்திக்க வேண்டும். பிறமொழி கற்க மாணவர்களுக்கு வழிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.