சமஸ்கிருதத்தை இழிவுப்படுத்திய உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்: பா.ஜ.,
சமஸ்கிருதத்தை இழிவுப்படுத்திய உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்: பா.ஜ.,
ADDED : நவ 24, 2025 03:57 PM

சென்னை: தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்த புத்தக விழாவில் பங்கேற்று பேசிய போது, பிரதமர் மோடி தமிழ் மொழி மீது போலியான பாச நாடகத்தை போடுகிறார் என்றும், ஒரு பக்கம் தமிழ் மீது அக்கறை இருப்பது போல் நாடகம் நடத்தும் மோடி இன்னொரு பக்கம் நம் பிள்ளைகள் தமிழ் படிக்க கூடாது என்று ஹிந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி செய்கிறார் என்றும் அவதூறு பிரச்சாரம் செய்துள்ளார்.
விளம்பர அரசியல் செய்து, வேண்டுமென்று பிரதமர் மோடியின் புகழை சீர்குலைக்கவும், தேர்தலுக்காக மொழி அரசியல் செய்யவும், மக்கள் விரோத திமுக அரசால் உருக்குலைந்து போயிருக்கும் தமிழக மக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் மலிவான அரசியல் செய்வதை உதயநிதி கைவிட வேண்டும். மேலும் இந்திய அரசியல் சாசன சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள, இந்து மக்களின் புனித மொழியாக போற்றப்படும் சமஸ்கிருத மொழியை 'செத்த மொழி' என்று மோசமான முறையில் இழிவாக விமர்சித்த உதயநிதி, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் தமிழகத்திற்கும், தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில், ஒரு மொழியை உயர்த்துவதாக சொல்லி ஒரு மொழியை கீழ்த்தரமாக தாழ்த்தி பேசுவது நியாயமா? இதுதான் தமிழை வளர்க்கும் விதமா? இந்தியா மட்டுமல்ல உலக மொழிகள் பேசும் அனைவரிடத்திலும் தமிழகத்தை சிறுமைப்படுத்தக்கூடிய வகையில் துணை முதல்வர் உதயநிதி நடந்து கொள்வது வெட்கக்கேடானது.
இனி இந்துமதம், சனாதன தர்மம் மட்டுமல்ல சமஸ்கிருத மொழி மட்டுமல்லாமல் எந்த மதத்தையும் எந்த தர்மத்தையும் எந்த மொழியையும் தவறான முறையில் விமர்சித்து பேசக்கூடாது என்று உதயநிதிக்கு அவரது தந்தையும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

